லட்டு சர்ச்சை விரதத்தை முடித்தார் பவன் கல்யாண் திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று தரிசனம்
திருமலை, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக மேற்கொண்ட 11 நாள் விரதத்தை முடித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு பாத யாத்திரையாக நேற்று சென்றார். ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் இது நடந்ததாக, தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் குற்றஞ்சாட்டியிருந்தார்.இதை உறுதி செய்து, திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திருப்பதி கோவிலுக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்கும் வகையில், 11 நாட்கள் விரதமிருந்து ஏழுமலையானை தரிசிக்கப் போவதாக துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் அறிவித்திருந்தார். அதன்படி, விரதத்தின் நிறைவு நாளான நேற்று, தன் மகள்கள் ஆத்யா மற்றும் பலினி அஞ்சனி ஆகியோருடன் அவர் திருப்பதிக்கு சென்றார். அலிபிரி மலைப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்ட பவன் கல்யாணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், ஆங்காங்கே சிறிது நேரம் அமர்ந்தபடியே திருமலை சென்றடைந்தார்.ஹிந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினர் திருமலையில் ஏழுமலையானை வழிபட, நம்பிக்கை பிரமாண பத்திரம் வழங்குவது அங்கு நடைமுறையில் உள்ளது. பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி அன்னா லெஷ்னேவா வெளிநாட்டைச் சேர்ந்தவர். இவர்களுக்கு பிறந்த பலினி அஞ்சனி மாற்று மதத்தவர் என்பதால், கோவிலில் தரிசனம் செய்வதற்கு முன், தேவஸ்தான அலுவலகத்துக்கு சென்று அது தொடர்பான பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டார். அவர் 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால், பவன் கல்யாணும் தன் மகளின் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டார். அதன் பின் அவர்கள் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசித்தனர். முன்னதாக, கடந்த வாரம் திருமலைக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்த முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஹிந்து அல்லாதவர் என்பதால் அவரை பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட பா.ஜ., வலியுறுத்தியது. இதையடுத்து, தன் திருமலை பயணத்தை அவர் ரத்து செய்தார்.