உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூனையை வணங்கும் மக்கள்

பூனையை வணங்கும் மக்கள்

பூனை என்றால் குழந்தைகளுக்கு குஷி, பெரியவர்களுக்கு அபசகுணம். வெளியே செல்லும் போது, நம் முன் தோன்றினால், அது திரும்பி செல்லும் வரை காத்திருப்பர். ஒருவேளை திரும்பி செல்லாமல், கடந்து சென்றால், இன்றைய பணி நடக்காது என்று எண்ணி, மீண்டும் வீட்டுக்கு சென்றுவிடுவர்.பூனை அபசகுணம் என்று கூறுபவர்கள், அதை வீட்டிற்குள் அனுமதிப்பர். இந்த மூட நம்பிக்கை இன்னும் தொடர்கிறது. ஆனால், பூனையை தங்கள் குல தெய்வமாக வழிபடும் கிராமத்தினர் உள்ளனர் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.மாண்டியா மாவட்டம், மத்துாரில் பெக்கலலே என்ற கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பூனைக்கென கோவில் கட்டி வழிபடுகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், இங்கு பூனையை, மங்கம்மாவின் அவதாரம் என்று கருதி, கோவில் கட்டி வழிபடுகின்றனர்.பல நுாறு ஆண்டுகளுக்கு முன், இக்கிராமத்தினரின் முன்னோரின் வீட்டில் இருந்த பூனை இறந்தது. அந்த பூனைக்கு, மனிதர்களுக்கு செய்யும் இறுதி சடங்கு போன்று செய்து, புதைத்து வழிபட்டனர்.அன்று முதல் அக்குடும்பத்திற்கு மட்டுமின்றி, கிராமத்தில் உள்ளவர்களுக்கு நல்ல விஷயங்களே நடக்க துவங்கின. இதற்கு பூனை வடிவில் தோன்றிய மங்கம்மா தான் காரணம் என்று முடிவெடுத்தனர். அன்று முதல் பூனையை வழிபட்டு வருகின்றனர். அதுபோன்று, முன்னோர்களுக்கு பூனை வடிவில் தோன்றிய மங்கம்மா, தனது சக்தியை வெளிப்படுத்திய பின், அவர்கள் கண் முன்னால் மறைந்தார். அவர் மறைந்த இடத்தில் புற்று தோன்றியது. அந்த இடத்தில் கோவில் கட்டி வழிபடுவதாகவும் கூறுகின்றனர்.மங்கம்மாவை வேண்டி திருமணம், புதிய வீடு வாங்குதல் என நாம் நினைத்து, பிரார்த்தனை செய்தால், நினைத்த காரியம் நடக்கிறது என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.இக்கிராமத்தில் பூனைகள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகின்றன. கிராமத்தில் பூனைகளை யாராவது துன்புறுத்தினால், குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர். கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் பூனை சடலம் கண்டால், அது மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

திருவிழா

மங்கம்மா திருவிழாவை மிகவும் விமர்சையாக கொண்டாடுகின்றனர். உள்ளூர் ஜோதிடர்கள், திருவிழா நடத்துவதற்கு உகந்த நாளை கண்டுபிடித்து, இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு விழாவை நடத்துவர்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்பவர்கள் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சி, பஸ்சில் செல்லலாம். ரயிலில் செல்பவர்கள், நிடகட்டா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சியில் செல்லலாம்.பஸ்சில் செல்பவர்கள் மத்துார், மலவள்ளி, மாண்டியாவில் இறங்கி, அங்கிருந்து செல்லலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை