உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி: மத்திய அரசு உத்தரவால் ஓலா - ஊபர் குஷி

இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி: மத்திய அரசு உத்தரவால் ஓலா - ஊபர் குஷி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, 'ஓலா, ஊபர்' உள்ளிட்ட வாடகை டாக்சி நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. வாடகை கார், பைக் மற்றும் ஆட்டோக்களை இயக்கும், 'ஓலா, ஊபர், ரேபிடோ' உள்ளிட்ட நிறுவனங்கள், தங்கள் விதிமுறைக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்துள்ளன. இவர்களுக்கென, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமும் அவ்வப்போது வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி, 2025ம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அபராதம்

'ஓலா, ஊபர்' உள்ளிட்ட வாடகை வாகன ஒருங்கிணைப்பாளர்கள், 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் அதிகப் பயன்பாட்டு நேரங்களில் அடிப்படை கட்டணத்தை விட இரண்டு மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். முன்னதாக இது 1.5 மடங்காக இருந்த நிலையில், அதை இரண்டு மடங்காக உயர்த்திக்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. அதேபோல், அதிக பயன்பாடு இல்லாத நேரங்களில் குறைந்தபட்சமாக அடிப்படை கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம். மாநில அரசுகள் அந்தந்த வாகன வகைகளுக்கு அறிவித்துள்ள கட்டணமே அடிப்படைக் கட்டணமாகக் கருதப்படும்.சரியான காரணம் இல்லாமல், ஒரு பயணத்தை அதன் ஓட்டுநர் ரத்து செய்தால், அவருக்கு 100 ரூபாய்க்கு மிகாமல், 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த அபராத தொகை ஓட்டுநர் மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனம் ஏற்கவேண்டும். சவாரியை ரத்து செய்யும் பயணியருக்கும் அபராதம் விதிக்கப்படும். திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் மூன்று மாதங்களுக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆயுள் காப்பீடு

வாடிக்கையாளர்கள் புறப்படும் இடத்தில் இருந்துதான், வாடகை கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும், வாடிக்கையாளரை ஏற்றிக் கொள்வதற்காக ஓட்டுநர் தான் இருக்கும் இடத்தில் இருந்து வாடிக்கையாளரின் இடத்திற்கு பயணம் செய்யும் துாரம் 3 கி.மீ.,க்கு உட்பட்டு இருந்தால், எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஒருங்கிணைப்பு நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஓட்டுநர் தன் சொந்த வாகனத்தைப் பயன்படுத்தினால், மொத்தக் கட்டணத்தில் குறைந்தபட்சம் 80 சதவீதம் ஓட்டுநருக்குச் சென்றடையும். ஒருங்கிணைப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்களை இயக்கும் ஓட்டுநருக்கு, மொத்தக் கட்டணத்தில் குறைந்தபட்சம் 60 சதவீதம் வழங்கப்படும். ஓட்டுநர்களுக்கான கட்டணப் பட்டுவாடா தினசரி, வாராந்திர அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தின்படி செய்யப்படும்.டாக்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் பணிபுரியும் அனைத்து ஓட்டுநர்களுக்கும், காப்பீடுத் தொகை எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஓட்டுநருக்கும் 5 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீடு தொகையும், 10 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Chitrarasan subramani
ஜூலை 05, 2025 17:33

இதை பற்றி கேள்வி கேட்டால் நமது ஒன்றிய நிதி அமைச்சர் நடந்து போனால் என்ன என்று நம்மை திருப்பி கேட்பார். தமிழ்நாட்டில் உள்ள சங்கிகளோ இதை நியாயப்படுத்த ஆயிரம் ஒப்பீடுகளை கூறுவார்கள்.முக்கியமாக ,திராவிடம் பெரியார் என சம்பந்தம் இல்லாமல் பேசுவார்கள்.அதிலும் வாசகர் ஆருர்ராங் விமர்சனமே தனி.


J Vijay Anand - DOC- CONTROLLER
ஜூலை 03, 2025 10:18

சார், வாண்ட் ஓலா/உபேர்/ரபிந்தோ but, சில முக்கிய தருணத்தில் ரிமோட் பகுதியிலிருந்து "ஓலா/ யூசர் ஆட்டோ/ கார் புக் செய்தால் - காண்பிக்கும் விலையை தாண்டி தனக்கு 100-200 கேட்கிறார்கள் இல்லையெனில் "வண்டி வராது என கூறி ட்ரிப்பை கேன்சல் செய்கிறார்கள்" இதுக்கு மட்டும் தீர்வு கிடைக்குமா?"


பெரிய குத்தூசி
ஜூலை 03, 2025 07:12

ஓலா ஏற்கனவே அதிக கட்டணம் வெச்சி கொள்ளை அடிக்கும், இப்ப இது வேறயா. ஆணியே புடுங்க வேண்டாம். நான் என்னுடைய வாகனத்திலேயே போறேன்.


Kasimani Baskaran
ஜூலை 03, 2025 03:52

ஞாயமான கட்டணம் இல்லை என்றால் அதிகப்பேர் உபயோகிக்க வரமாட்டார்கள்.


sasikumaren
ஜூலை 03, 2025 02:51

மத்திய அரசு இப்போது சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே டாக்சி நிறுவனங்கள் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டது இதில் மீண்டும் அதிக கொள்ளை அடிக்க மத்திய அரசு தூண்டி விடுகிறது மாநில மத்திய அரசுகள் மக்களுக்கு நல்லது செய்வதை விட தீயது செய்வதில் தான் அதிகமாக உழைக்கிறார்கள் உபேர் ஓலா ரேபிடோ நிறுவனங்கள் மத்திய அரசியல் வியாதிகள் முதலாளிகளாக இருக்கிறார்களா என்று சந்தேகம் வந்து விட்டது.


புதிய வீடியோ