சிறந்த தலைமை பண்புள்ளவர் பிரதமர் மோடி மறைந்த காங்., தலைவரின் மகன் பாராட்டு
புதுடில்லி: ''நம் நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. சிறந்த தலைமைப் பண்பை கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பெரிய நெருக்கடியில் இருந்து நம்மை மீட்டுள்ளார்,'' என, மறைந்த காங்., மூத்த தலைவர் அகமது படேலின் மகன் பைசல் பாராட்டி உள்ளார். குஜராத்தின் பரூச் தொகுதி எம்.பி.,யாக, காங்., சார்பில் மூன்று முறை போட்டியிட்டு வென்றவர் அகமது படேல். ஐந்து முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பதவி வகித்தவர். காங்கிரசில் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய அகமது படேல், சோனியாவின் அரசியல் ஆலோசகராகவும் இருந்தார். அவரது குடும்பத்துக்கு நெருக்கமானவராக இருந்த அகமது படேல், 2020ல், கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கடந்த லோக்சபா தேர்தலில், பரூச் தொகுதியை ஆம் ஆத்மிக்கு காங்., விட்டுக் கொடுத்தது. இதனால் அகமது படேலின் மகன் பைசல், மகள் மும்தாஜ் அதிருப்தி அடைந்தனர். இத்தொகுதியில் பா.ஜ.,விடம் ஆம் ஆத்மி தோற்றது. சில மாதங்களுக்கு முன், 'காங்கிரசுக்கு இனி வேலை செய்ய மாட்டேன்' என, பைசல் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது மனம் மாறிய பைசல் கூறியதாவது:
காங்கிரசில் தான் இருக்கிறேன். பொது வாழ்வில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்தேனே தவிர, கட்சியில் இருந்து விலகவில்லை. 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை நம் ஆயுதப் படைகள் வெற்றி கரமாக நடத்தின. சிறந்த தலைமைப் பண்புடன் பிரதமர் மோடி உள்ளார். பெரிய நெருக்கடியில் இருந்து நம்மை அவர் மீட்டுள்ளார். சிறந்த அதிகாரிகளை தேர்வு செய்து, அவர்களை தலைவர்களாக்கி அமைச்சர் பதவியில் அமர வைப்பது பெரிய விஷயம். இதை பிரதமர் மோடி சர்வ சாதாரணமாக செய்கிறார். இதற்கு உதாரணம், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். உள்நாட்டு பிரச்னைகள் தொடர்பாக, காங்., மூத்த தலைவர்களுக்கு சரியான ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.