உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போக்சோ வழக்கு எதிரொலி ஜானி மாஸ்டருக்கு விருது ரத்து

போக்சோ வழக்கு எதிரொலி ஜானி மாஸ்டருக்கு விருது ரத்து

புதுடில்லி: பாலியல் புகாரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதன் காரணமாக, பிரபல நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை மத்திய அரசு ரத்து செய்தது.தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் ஜானி மாஸ்டர் எனப்படும் ஷேக் ஜானி பாஷா. தமிழில் வாரிசு, பீஸ்ட், ஜெயிலர் உட்பட பல்வேறு படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2022ல் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில், 'மேகம் கருக்காதா...' என்ற பாடலுக்கு சிறந்த முறையில் நடனம் அமைத்ததற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.இந்த சூழலில், இவருடன் இணைந்து பணியாற்றிய 21 வயது பெண் நடன உதவி இயக்குனர், ஜானி மீது பாலியல் புகார் அளித்தார். அதில், தன் 16 வயது முதல் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து, ஜானி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த தெலுங்கானா போலீசார் அவரை கைது செய்தனர். தேசிய விருதை பெறுவதற்காக ஜாமினில் விடுவிக்கும்படி ரங்காரெட்டி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் ஜானி மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து, நேற்று முதல் 10ம் தேதி வரை அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்நிலையில், ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை நேற்று ரத்து செய்தது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள கடிதத்தில், 'போக்சோ குற்றச்சாட்டுகள் வெளிவருவதற்கு முன் ஜானிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.'வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது, மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. தேசிய திரைப்பட விழாவில் பங்கேற்க, அவருக்கு அனுப்பப்பட்ட அழைப்பும் திரும்பப் பெறப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லியில், 70வது தேசிய திரைப்பட விழா நாளை நடக்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி