கப்பல் மூழ்கி கரை ஒதுங்கிய கன்டெய்னர் எண்ணெய் கசிவதால் போலீசார் எச்சரிக்கை
கொல்லம், மேற்கு ஆப்ரிக்க நாடான லைபீரியாவைச் சேர்ந்த 'எம்.எஸ்.சி., - எல்சா- 3' என்ற சரக்கு கப்பல், கேரளாவின் விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தில் இருந்து, கடந்த 23-ம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டது. இந்த கப்பல், கொச்சி துறைமுகத்துக்கு செல்லும் வழியில், கடந்த 24ம் தேதி நடுக்கடலில் கவிழ்ந்தது. கப்பலில் இருந்த 24 பணியாளர்களை கடலோர காவல் படையினர் மீட்டனர்.சரக்கு கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் கடலில் மிதந்தன. இதில், 367.1 மெட்ரிக் டன் சல்பர் எரிவாயு எண்ணெயும், 84.4 மெட்ரிக் டன் டீசலும் இருந்தன. இதுதவிர, சில கன்டெய்னர்களில் கால்ஷியம் கார்பைட் என்ற ரசாயனமும் இருந்தது. இவை, கடலில் கலந்தால் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.இதுகுறித்து கேரள போலீசார் கூறியதாவது:சரக்கு கப்பலில் இருந்த சில கன்டெய்னர்கள், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்ட கடற்கரையோரங்களில் ஒதுங்கி உள்ளன. கன்டெய்னர்களில் இருந்து எளிதில் தீப்பற்றக்கூடிய எண்ணெய் கசிவதால், பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.மணிக்கு 3 கி.மீ., வேகத்தில் எண்ணெய், கடலில் கசிவதால் கடற்பரப்பில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அப்பகுதிகளை, கடலோர காவல்படையினரின் உதவியுடன் கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
எத்தனை கன்டெய்னர்?
திருவனந்தபுரம் மண்டல சுங்கத்துறையின் தலைமை கமிஷனர் வெளியிட்ட அறிக்கை:கொச்சி கடற்பரப்பு அருகே கவிழ்ந்த சரக்கு கப்பலில், மொத்தம் 643 கன்டெய்னர்கள் இருந்தன. இதில், 73 கன்டெய்னர்கள் காலியானவை; ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருட்கள், 13 கன்டெய்னர்களில் மட்டுமே உள்ளன. சரக்கு கப்பல் விபத்துக்குள்ளானபோது, அதில் இருந்த எந்தப் பொருட்களுக்கும் வரி செலுத்தப்படவில்லை. எனவே, அத்தகைய பொருட்களை அங்கீகரிக்கப்படாத முறையில் அகற்றுவதோ அல்லது திருடுவதோ சட்டவிரோதமானது.இந்த கன்டெய்னர்களில், ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் இருப்பதால், சுங்கத்துறையின் கடலோர மற்றும் தடுப்புப் பிரிவுகள் மற்ற துறையினருடன் இணைந்து கண்காணிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.