கம்யூ., மூத்த தலைவர் மீது போலீஸ் வழக்கு பதிவு
ஆலப்புழா: 'தபால் ஓட்டுகளை உடைத்து பார்ப்பது எங்கள் வழக்கம்' என பேசிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஜி.சுதாகரன் மீது ஆலப்புழா போலீசில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜி.சுதாகரன். அவர் கடந்த புதன்கிழமை நடந்த கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய போது,'கட்சிக்காக அனைத்து என்.ஜி.ஓ.,க்களும் ஓட்டளிக்க வேண்டியது அவசியம்.'சீல் வைத்த கவரில் வைத்து ஓட்டுகளை போட்டு விட்டோம் என யாராவது நினைத்தால், அதை மாற்றிக் கொள்ளுங்கள். சீல் வைக்கப்பட்ட தபால் ஓட்டுகளையே நாங்கள் பிரித்து பார்த்தவர்கள். 1989 ஆலப்புழா லோக்சபா தேர்தலில், தபால் ஓட்டுகளை பிரித்து பார்த்துள்ளோம்' என்றார்.அவர் பேசியது சர்ச்சையானதும், மறுநாள், 'நான் அவ்வாறு பேசவில்லை. அத்தகைய முறைகேடான செயலில் நாங்கள் ஈடுபட்டதில்லை. நானும் அந்த செயலை செய்ததில்லை' என்றார்.எனினும், ஆலப்புழா போலீசில், ஜி.சுதாகரன் மீது நேற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, அதிகபட்சம் இரண்டாண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இந்திய குற்ற நடைமுறை சட்டப்படி, 2 - 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.