உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிகிச்சை அளித்த டாக்டர் சுட்டுக்கொலை இரண்டு சிறுவர்களுக்கு போலீஸ் வலை

சிகிச்சை அளித்த டாக்டர் சுட்டுக்கொலை இரண்டு சிறுவர்களுக்கு போலீஸ் வலை

புதுடில்லி: டில்லியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற இரு சிறுவர்கள், அங்கிருந்த டாக்டரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டில்லியின் ஜெய்த்பூரில் நிமா என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, இரண்டு சிறுவர்கள் சிகிச்சைக்காக நேற்று அதிகாலை சென்றனர்.

துப்பாக்கிச் சூடு

சிறுவன் ஒருவன் காலில் ஏற்பட்ட காயத்துக்கு கட்டு கட்டு வதற்காக தன் நண்பனுடன் வந்ததாக கூறப்படுகிறது. கட்டு கட்டியதை அடுத்து ஆலோசனைக்காக, அங்கிருந்த டாக்டர் ஜாவேத் அக்தரின் அறைக்கு இருவரும் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில், துப்பாக்கிக் குண்டு சத்தமும், டாக்டரின் அலறல் சத்தமும் கேட்டதை அடுத்து ஊழியர்கள் அங்கு விரைந்தனர்.அங்கு, தலையில் ரத்த காயத்துடன் டாக்டர் இறந்து கிடந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். முந்தைய நாள் இரவு, இரண்டு சிறுவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்ததாக கூறிய ஊழியர்கள், நேற்று இரண்டாவது நாளாக வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவித்தனர்.மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரைத் தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், திட்டமிட்டு நடந்துள்ள இந்த கொலை சம்பவம் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.சில தினங்களுக்கு முன், தலைநகரின் மூன்று இடங்களில் பணம் கேட்டு மிரட்டி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை உள்ளே புகுந்து டாக்டர் கொலை செய்யப்பட்டுள்ளதால், டில்லியில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுஉள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அச்சம்

மேற்கு வங்கம், கோல்கட்டாவில் கடந்த ஆக., 9ல், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் வடு மறைவதற்குள், டில்லி மருத்துவமனையில் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியிருப்பது, பயிற்சி டாக்டர்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை