வங்கியில் கொள்ளையடிக்க வந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
தாவணகெரே,: கர்நாடகாவில் வங்கியை கொள்ளையடிக்க வந்த, உத்தர பிரதேசத்தின் நான்கு பேர் மீது தாவணகெரே போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர்.தாவணகெரே மாவட்டம், ஹொன்னாளி தாலுகா அருகில், நேற்று அதிகாலை 1:40 மணியளவில், போலீசார் தடுப்புகள் வைத்து, அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.வங்கி கொள்ளையில் வெளிமாநில கும்பல் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனால், போலீசார் உஷாராகி, வாகனங்களை கண்காணித்து வந்தனர். இரண்டு கார்கள்
அப்போது அந்த வழியாக, உத்தர பிரதேச பதிவு எண் கொண்ட 'எர்டிகா, மஹிந்திரா எஸ்யுவி 500' என, இரண்டு கார்கள் அதிவேகமாக வந்தன.இந்த கார்களை பார்த்த போலீசார், தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கார்கள் நிற்காமல் சென்றன.சந்தேகம் அடைந்த போலீசார், கார்களை விரட்டி சென்று ஆரபகட்டா அருகில் மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த நபர்கள், அரிவாளால் தாக்கியதில் ஏட்டு ஆனந்த் காயமடைந்தார்.இதனால் இன்ஸ்பெக்டர் ரவி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, சரண் அடையும்படி எச்சரித்தார். ஆனால் அந்நபர்கள் ஆயுதங்களால் தாக்க முற்பட்டனர். அப்போது தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் சுட்டதில், ஒரு நபரின் காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். அவரை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் இவரது பெயர் குட்டு என்ற குட்டு காலியா, 45, என்பது தெரிந்தது. தப்பியோட்டம்
இவருடன் இருந்த ஹஜரத் அலி, 50, அஸ்லாம் டன்டன், 55, கமருதீன் என்ற பாபு செரலி,40, ஆகியோரையும் கைது செய்தனர். கும்பலின் தலைவன் ராஜாராம், பாபுஷா, அபிஷ் தப்பி விட்டனர். அவர்களை போலீசார் தேடுகின்றனர். சம்பவத்தில் காயமடைந்த ஏட்டு ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.உத்தர பிரதேசத்தை சேர்ந்த கொள்ளை கும்பல், ஒரு வாரத்துக்கு முன் கர்நாடகாவுக்கு வந்து தாவணகெரேவில் தங்கியதும், ஹொன்னாளி தாலுகாவின், சவளங்கி கிராமத்தில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிந்தது.பெங்களூரு ரூரலின் ஹொசஹள்ளியில் வீடு ஒன்றில், 3 கோடியே 33 லட்சத்து 82,940 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடியுள்ளனர்.கொப்பாலின் பேவூரில் ஒரு கோடியே 46 லட்சத்து 55,9-05 ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் திருடியதும் இவர்கள்தான். ஷிவமொக்கா உட்பட பல இடங்களில் நடந்த கொள்ளைகளில் ஈடுபட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.சில மாதங்களுக்கு முன், நாமதியில் நடந்த எஸ்.பி.ஐ., வங்கி கொள்ளையிலும் இவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, பிடிபட்ட நால்வரிடமும் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.