உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயி தற்கொலையை தடுக்க எக்கச்சக்க செலவு; ரூ.9.91 லட்சம் பில் அனுப்பிய போலீசார்

விவசாயி தற்கொலையை தடுக்க எக்கச்சக்க செலவு; ரூ.9.91 லட்சம் பில் அனுப்பிய போலீசார்

ஜெய்ப்பூர்: தற்கொலைக்கு முயன்ற விவசாயி குடும்பத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றிய போலீசார், ரூ.9.91 லட்சம் அபராதம் விதித்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி வித்யதார் யாதவ் என்ற விவசாயி, தனது நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து விட்டதாகக் கூறி, கடந்த டிச.,10ம் தேதி குடும்பத்துடன் போராட்டம் நடத்தினார். ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு நெருப்பு மூட்டி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்க வந்து விவசாயியையும், அவரது குடும்பத்தினரையும் தற்கொலை செய்ய விடாமல் தடுத்தனர். இந்த நிலையில், ராஜஸ்தான் அரசு சார்பில் ஜுன்ஜுனு மாவட்ட எஸ்.பி., சரத் சவுத்ரி, விவசாயி வித்யதார் யாதவுக்கு நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது: உங்களின் தற்கொலையை தடுக்க ஒரு ஏ.எஸ்.பி., இரு டி.எஸ்.பி., உள்பட 99 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநில கருவூலத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. எனவே, எஸ்.பி., அலுவலக வங்கிக் கணக்கில் ரூ.9 லட்சத்து 91 ஆயிரத்து 577 ரூபாயை செலுத்த வேண்டும் என்றும், டிச.,24ம் தேதிக்குள் பணத்தை செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் விவசாயி குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒருவர் தற்கொலை செய்வதை தடுப்பதற்காக சென்ற போலீசார், செலவு கணக்கு காட்டி அபராதம் விதிப்பது ராஜஸ்தானில் இதுவே முதல்முறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை