மணிப்பூரில் போலீஸ் ஸ்டேஷன் சூறையாடல்
இம்பால்: மணிப்பூரில் நாகா சமூகத்தினரிடையே வெடித்த மோதலை அடுத்து, போலீஸ் ஸ்டேஷன் சூறையாடப்பட்டு அங்கிருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, கடந்த ஆண்டு மே மாதம் கூகி - மெய்டி பழங்குடியின சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறி, 10 மாதங்களுக்கு மேலாக நீடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இந்நிலையில், உக்ருல் மாவட்டத்தில் உள்ள உக்ருல் நகரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. நாகா சமூகத்தினர் இந்த பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், சர்ச்சைக்குரிய நிலத்தை சுத்தம் செய்வதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த சிலர், பிறரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மணிப்பூர் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வொர்ரின்மி தும்ரா உட்பட மூன்று பேர் பலியாகினர்; 20 பேர் காயமடைந்தனர்.இதன் தொடர்ச்சியாக, வினோ பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் உக்ருல் போலீஸ் ஸ்டேஷனை வன்முறையில் ஈடுபட்டோர் நேற்று அதிகாலையில் முற்றுகையிட்டனர். அங்கிருந்த போலீசாரை சரமாரியாக தாக்கியதுடன், ஏ.கே., - 47, இன்சாஸ் ரைபிள்ஸ் உள்ளிட்ட ஆயுதங்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். வன்முறை சம்பவங்களை அடுத்து மாவட்டம் முழுதும் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் உக்ருல் மாவட்டம் முழுதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் விடுவிப்பு
மணிப்பூரில் தவுபால் மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் 27ம் தேதி, மூன்று இளைஞர்கள் வேலைக்கு சென்றனர். அவர்களில் ஒருவர் திரும்பிய நிலையில், இருவர் மாயமாகினர். கூகி போராளிகளால் அவர்கள் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அவர்களை விடுவிக்க சிறையில் உள்ள மார்க் ஹாகிப் உள்ளிட்ட 12 கூகி போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில், 11 போராளிகள் நேற்று விடுவிக்கப்பட்டதை அடுத்து, கடத்தப்பட்ட இரு இளைஞர்களும் காம்கிபாய் சோதனைச்சாவடியில் காங்போக்பி மாவட்ட எஸ்.பி.,யிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கிடையே, 'போராளிகளின் கோரிக்கையை ஏற்று, 11 பேர் விடுதலை செய்யப்படவில்லை; அவர்களின் தண்டனை காலம் முடிந்த பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்' என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.