ஏரிக்கு நடுவில் மின் கம்பம்; நீந்தி சென்ற லைன்மேன்
ஹாவேரி; ஏரிக்கு நடுவில் இருந்த மின் கம்பம் பழுதடைந்திருந்தது. இதை, 'லைன்மேன்' நீந்தி சென்று பழுது பார்த்தார்.சிறிது நேரம் மின்சாரம் தடைபட்டால், மின் வினியோக நிறுவனங்கள் மீது மக்கள் கோபமடைவர். உள் நோக்கத்துடன் மின் இணைப்பை துண்டித்ததாக குற்றம்சாட்டுவர். மின் வினியோக நிறுவன ஊழியர்கள் உயிரை பணையம் வைத்து பணியாற்றுவது, மக்களுக்கு தெரிவதில்லை.ஹாவேரி, சவனுாரின், ஹத்தி மத்துார் கிராமத்தில், ஏரியின் நடுவில் மின் கம்பம் உள்ளது. இதன் இன்சுலேட்டர் பழுதடைந்ததால், மின்சாரம் தடைபட்டது.இது தொடர்பாக, மின் வினியோக நிறுவனத்துக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். தேற்று முன்தினம் லைன்மேன்கள் ராகவேந்திரா, ஹனுமந்தப்பா அங்கு வந்தனர்.ராகவேந்திரா ஆழமான ஏரியில் நீந்தி சென்று, நடுவில் இருந்த மின் மாற்றியில் ஏறி, இன்சுலேட்டரை மாற்றினார்.இவருக்கு ஹனுமந்தப்பா உதவியாக இருந்தார். இவர்களின் பணியை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.ராகவேந்திரா கூறியதாவது:வெள்ளப்பெருக்கில் மின்சாரம் தடைபட்டால், நாங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறோம்.நாங்கள் மட்டுமல்ல, எங்களை போன்ற லைன்மேன்கள் பணியாற்றுகின்றனர். இது எங்களின் கடமை. மக்களுக்கு சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம்.மின்சாரம் தடைபட்டால், எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும், பழுது பார்ப்பது அவசியம். சில ஏரிகளின் நடுவே மின் கம்பங்கள் அமைந்துள்ளன.இந்த கம்பங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால், எங்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி, நாங்கள் அங்கு சென்று பழுது பார்க்கிறோம்.மாநில அரசு எங்களுக்கு ஹெல்மெட், பூட்ஸ், சீருடை உட்பட மின்சாரத்தை பழுது பார்க்க தேவையான பொருட்களை வினியோகித்துள்ளது.ஆனால் ஏரிக்கு நடுவில் உள்ள மின் கம்பங்களை பழுது பார்க்க, போட் தேவை. சிலருக்கு நீந்த தெரியாது.அவர்களுக்கு லைப் ஜாக்கெட் வேண்டும். இவற்றை வழங்கினால் பணியாற்ற உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.