பேரிடரை எதிர்கொள்ள தயாராகுங்க: டில்லி ஏர்போர்ட் பகுதிவாசிகளுக்கு உத்தரவு
புதுடில்லி:டில்லி விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில், பேரிடர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி, எந்த நேரமும், எவ்வித பேரிடரையும் நிர்வகிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி சுற்றுலா பயணியர், 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக, நம் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் நிலைகள் மற்றும் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, நாடு முழுவதும் பேரிடர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த, உத்தரவிடப்பட்டது. டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், பேரிடர் மேலாண்மை உத்தரவை இதுவரை பின்பற்றவில்லை. எனவே, அந்த பகுதிகளில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், வீடுகள், வர்த்தக அமைப்புகள் போன்றவற்றிற்கு, மத்திய அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, எந்த நேரமும் பேரிடரை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப, பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 'அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவசர காலங்களில் அங்கு சிகிச்சை பெற ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.