காங்., - சமாஜ்வாதி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு! வாரணாசியை புறக்கணித்ததாக ஆவேசம்
வாரணாசி: ''வாரணாசியின் வளர்ச்சியில், காங்., - சமாஜ்வாதி துளிகூட அக்கறை காட்டவில்லை. குடும்ப உறுப்பினர்களை திருப்திப்படுத்தவும், ஓட்டு வங்கி அரசியல் செய்யவும், இரு கட்சிகளும் வேண்டுமென்றே வாரணாசியை புறக்கணித்தன,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.உத்தர பிரதேசத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். வாரணாசியில் நடந்த விழாவில், காஞ்சி மடத்தால் நடத்தப்படும், ராகேஷ் ஜுஜுன்வாலா சங்கரா கண் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையால், உ.பி.,யின் 20 மாவட்ட மக்கள், பீஹார், ம.பி., சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்கள் பயனடைவர். தொடர்ந்து, சிக்ரா நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6,700 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். வாரணாசியில் மட்டும், 3,200 கோடி ரூபாய் மதிப்புள்ள, 16 திட்டங்கள் இதில் அடங்கும்.ஏக்கத்துடன் காத்திருப்பு:
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கோடிக்கணக்கான ஊழல்கள் மட்டுமே தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றன. ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் வரை, வளர்ச்சிக்காக வாரணாசி ஏக்கத்துடன் காத்திருந்தது. உ.பி.,யில் நீண்ட காலமாகவும், டில்லியில் பல ஆண்டுகளாகவும் ஆட்சி செய்தவர்கள், வாரணாசி வளர்ச்சியைப் பற்றி கவலைப்படவில்லை. காங்., - சமாஜ்வாதி என இரு கட்சிகளுமே, வேண்டுமென்றே வாரணாசியை புறக்கணித்தன. தங்களின் குடும்ப உறுப்பினர்களை திருப்திப்படுத்தவும், ஓட்டு வங்கி அரசியல் செய்யவுமே அக்கட்சிகளுக்கு நேரம் போதவில்லை. வேலைவாய்ப்பு:
மாநில மக்களின் நலன் பற்றி கவலைப்படாத இந்த கட்சிகள், மக்கள் நலத்திட்டங்கள் உட்பட அனைத்திலும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருந்தன. இந்த விஷயத்தில் மட்டும், காங்., - சமாஜ்வாதி இடையே ஒற்றுமை இருந்தது. மக்களின் வசதியை அதிகரிப்பது, வேலைவாய்ப்பு வழங்குவது தான் எங்களின் தற்போதைய இலக்கு. இதை நோக்கியே என் அரசு பயணித்து வருகிறது. தற்போது நாட்டில் புதிய நெடுஞ்சாலைகள் கட்டப்படுகின்றன; புதிய வழித்தடங்களில் ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன; புதிய விமான நிலையங்கள் கட்டப்படுகின்றன. இவை அனைத்தும் மக்களுக்காக தான். இதனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விஜயேந்திரர் வாழ்த்து
கண் மருத்துவமனை திறப்பு விழாவில், காஞ்சி காம கோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது: நரேந்திர மோடியை கடவுள் ஆசீர்வதித்து உள்ளார். அவரது என்.டி.ஏ., அரசு என்பது, நரேந்திர தாமோதர் தாஸின் ஒழுக்கம். உலகிலேயே சிறந்த அரசாக, அனைவரின் நலனுக்காக மத்திய அரசு பணிகளை செய்து வருகிறது. நமக்கு நல்ல தலைவர்கள் கிடைத்துள்ளனர். சமூகத்திற்கு, ஆளுமையும், நல்லொழுக்கம் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் தலைவர் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.
கண் மருத்துவமனை திறப்பு
முன்னதாக, வாரணாசியில் ராகேஷ் ஜுஜுன்வாலா சங்கரா கண் மருத்துவமனையை திறந்து வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: நீண்ட காலமாக, காசியின் அடையாளமாக மதம் மற்றும் ஆன்மிகம் இருக்கிறது. ஆனால் தற்போது, வாரணாசியில் கிடைக்கும் பல்வேறு சிறந்த சுகாதார சிகிச்சை வசதிகளால், ஒரு பெரிய சுகாதார மையமாக காசி உருவெடுத்துள்ளது. நான் இந்த கண் மருத்துவமனைக்குச் சென்றேன். இது ஆன்மிகம் மற்றும் நவீனத்துவத்தின் கலவை. இந்த மருத்துவமனை, வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவிகரமாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், வாரணாசி, பூர்வாஞ்சல் பகுதிகளில் எந்த சுகாதார வசதிகளும் இல்லை. ஆனால் மத்தியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்றதும், அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. மக்களின் எண்ணங்களுக்கேற்ப எங்களது செயல்பாடுகள் இருந்து வருகின்றன. வாரணாசியை, காங்., -- சமாஜ்வாதி ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டன. இவ்வாறு அவர் பேசினார்.