உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பிரதமர் மோடி புகழாரம்

இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பிரதமர் மோடி புகழாரம்

நாக்பூர்: பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்துக்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது, ''ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு இந்திய கலாசாரத்தின் ஆலமரம்,'' என, குறிப்பிட்டார்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைமையகம், மஹாராஷ்டிராவின் நாக்பூரில் அமைந்துள்ளது. கடந்த 2014ல் பிரதமராக பதவியேற்ற பின், முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்துக்கு மோடி நேற்று சென்றார்.பா.ஜ.,வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, தன் மூன்றாவது ஆட்சி காலத்தின்போது, 2000ல் இங்கு சென்றுள்ளார்.பா.ஜ.,வின் ஹிந்துத்துவா கொள்கைகளுக்கு முன்னோடியாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, 100வது ஆண்டை கொண்டாடி வருகிறது.ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் உள்ள, அதன் நிறுவனரான டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் நினைவாக அமைக்கப்பட்டுள்ள, 'ஸ்மிருதி மந்திர்' எனப்படும் நினைவிடத்தில் பிரதமர் மோடி நேற்று மரியாதை செலுத்தினார்.அமைப்பின் இரண்டாவது தலைவரான மாதவ் சதாசிவ கோல்வல்கர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.முன்னதாக, அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், 1956ல் புத்த மதத்துக்கு மாறிய தீட்சாபூமி நினைவிடத்துக்குச் சென்று மோடி மரியாதை செலுத்தினார். மாதவ் கோல்வல்கர் நினைவாக கட்டப்பட்டுள்ள மாதவ் நேத்ராலயா கண் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லையும் மோடி நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்கள், நாடு முழுதும் பல துறைகளில், தன்னமில்லாமல் சேவையாற்றி வருகின்றனர். இந்த அமைப்பு, இந்தியாவின் அழிவில்லாத கலாசாரம் மற்றும் நவீனத்தின் ஆலமரமாக விளங்குகிறது.நாட்டின் மனசாட்சியை பாதுகாக்கும் நோக்கத்துடன் இவர்கள் சேவை செய்கின்றனர். கடந்த 100 ஆண்டுகளாக, நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா விளங்குவதற்கு அடிப்படையாக அமையும். அடுத்த, 1,000 ஆண்டுகளுக்கான வலுவான மற்றும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அடிக்கல்லாக அமைய உள்ளதால், வரும் ஆண்டுகள் நமக்கு மிகவும் முக்கியமானதாகும்.இவ்வாறு அவர் பேசினார்.ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Marai Nayagan
மார் 31, 2025 13:52

தேச ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு ஆர் எஸ் எஸ் ஆற்றிய பங்கு மகத்தானது.


Senthoora
மார் 31, 2025 05:42

இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் போகாத ஒரு இயக்க அலுவலகத்துக்கு போயிருக்கிறார், பதவியை காப்பாற்ற என்று சொல்லுறாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை