செப் ., 13ல் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகளான நிலையில், பிரதமர் மோடி முதன்முறையாக, வரும் 13ல் அங்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வடகிழக்கு மாநிலமான மிசோரமில், பைராபி- - சாய்ராங் இடையே, 51.38 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இது, அசாமின் சில்சார் வழியாக, மிசோரமை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. இந்த ரயில் திட்டத்தை துவக்கி வைக்க, பிரதமர் மோடி வரும் 13ல் மிசோரம் செல்கிறார். இதன்பின், அன்றைய தினமே இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, அவர் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.மணிப்பூரில், கூகி - மெய்டி பிரிவினரிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக, 2023 மே மாதம் மோதல் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையால் படிப்படியாக இயல்புநிலை திரும்பியது. எனினும் அவ்வப்போது சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இதையடுத்து, முதல்வராக இருந்த பா.ஜ., மூத்த தலைவர் பைரேன் சிங், கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 'வன்முறை நடந்து இரண்டு ஆண்டுகளான நிலையிலும், மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட செல்லவில்லை' என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டின. இந்நிலையில், கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின், வரும் 13ல், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல இருப்பது கவனம் பெற்றுள்ளது.