65 லட்சம் பேருக்கு சொத்து அட்டைகள் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்
புதுடில்லி, நாடு முழுதும், 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 65 லட்சம் பேருக்கு, 'ஸ்வாமித்வா' சொத்து அட்டைகளை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். இது கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதுடன், வறுமையில் இருந்து மீட்டெடுக்க உதவுகிறது என, அவர் குறிப்பிட்டார்.நாடு முழுதும் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, அவர்களது சொத்துக்கான உரிமையை வழங்கும் வகையில், 2020ல் அறிமுகம் செய்யப்பட்டது, ஸ்வாமித்வா சொத்து அட்டை திட்டம். 50,000 கிராமங்கள்
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 10 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள, 50,000 கிராமங்களைச் சேர்ந்த, 65 லட்சம் பேருக்கு, ஸ்வாமித்வா சொத்து அட்டைகள் நேற்று வழங்கப்பட்டன.சத்தீஸ்கர், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டன.'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இந்த அட்டைகளை வழங்கிய பிரதமர் மோடி, பயனாளிகளுடன் உரையாற்றினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:சொத்து உரிமை என்பது உலகளாவிய பிரச்னையாக உள்ளது. உரிய சொத்து ஆவணங்கள் இல்லாமல் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக, ஐ.நா., சபை சில ஆண்டுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சொத்து உரிமை என்பது, வறுமை ஒழிப்புடன் தொடர்புடையது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சொத்து உரிமை ஆவணங்கள் இல்லாமல் கிராமங்களில் உள்ள சொத்துக்கள் ஒரு உயிரில்லாத முதலீடாகவே இருக்கும் என, பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். நம் நாட்டிலும் இந்தப் பிரச்னை இருந்து வந்துள்ளது. ஆனால், முந்தைய அரசுகள் அதில் கவனம் செலுத்தவில்லை. சர்ச்சை
இந்த, 65 லட்சம் பேரையும் சேர்த்து, இதுவரை, 2.25 கோடி பேருக்கு ஸ்வாமித்வா சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, கிராம மக்களுக்கு சொத்து உரிமை கிடைத்துள்ளது. சொத்து தொடர்பான சர்ச்சைகள், ஆக்கிரமிப்பு, பறிப்பது போன்றவை தடுக்கப்பட்டுள்ளன.மேலும், இந்த சொத்து உரிமை வாயிலாக, அதன் மீது கடன் வாங்கி தொழில் செய்கின்றனர். அரசின் பல மானிய திட்டங்களின் பலன்களையும், இந்த சொத்து உரிமை அட்டை வாயிலாக பெற முடியும். இது கிராமங்களில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன், வறுமையை ஒழிக்க உதவுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
3.17 லட்சம் கிராமங்களில் ஆய்வு!
குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஸ்வாமித்வா சொத்து அட்டைகளை வழங்கி, பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான நட்டா பேசியதாவது:'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக கிராமங்களில் சொத்துக்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஏழை, எளிய கிராம மக்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில், அவர்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் அனைத்து திட்டங்களும், கிராமங்கள், பெண்கள், தலித்கள், மிகவும் பின்தங்கியோர், விவசாயிகளின் நலனை அடிப்படையாக கொண்டவை. நாடு முழுதும், 3.17 லட்சம் கிராமங்களில், நிலங்களை அளவிடும் ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. இது மொத்த இலக்கில் 92 சதவீதமாகும். இதுவரை, 1.53 லட்சம் கிராமங்களில், 2.25 கோடி சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.