தானம் பெறப்பட்ட உடல் உறுப்புகளை ஒதுக்குவதில் பெண்களுக்கு முன்னுரிமை: தேசிய அமைப்பு பரிந்துரை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ''தானம் பெறப்படும் உடல் உறுப்புகளை ஒதுக்குவதில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை அமைப்பு (NOTTO) பரிந்துரைத்துள்ளது.உறுப்பு தானம் என்பது ஒரு நபரிடமிருந்து (உறுப்பு தானம் செய்பவர்) ஒரு உறுப்பு அல்லது திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மற்றொரு நபருக்கு வைப்பது ஆகும். கல்லீரல், சிறுநீரகம், கணையம், இதயம், நுரையீரல், குடல், கார்னியாஸ், மத்திய காது, தோல், எலும்பு, எலும்பு மஜ்ஜை, இதய வால்வுகள், இணைப்பு திசு உள்ளிட்டவை தானம் பெறப்படுகின்றன.தற்போது உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மூளைச்சாவு அடைந்த நபர்களின் உடல் உறுப்புகள், உறவினர்கள் சம்மதத்துடன் தானம் பெறப்படுகின்றன. தானம் செய்பவர்களில் பெண்கள் அதிக சதவீதத்தில் இருக்கின்றனர். ஆனால் தானம் பெறுபவர்களின் சதவீதத்தில் பெண்கள் மிகக் குறைவாகவே உள்ளனர்.இதனால் தானங்கள் வாயிலாக பெறப்படும் உறுப்புகளை ஒதுக்குவதில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை அமைப்பு (NOTTO) பரிந்துரைத்து உள்ளது.இது தொடர்பாக, மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை அமைப்பு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:* இறந்த பிறகு உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் இறுதிச்சடங்கு கண்ணியமான முறையில் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். * மாவட்ட நீதிபதி அல்லது மற்றொரு மூத்த அதிகாரி இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டும்.* பாலின வேறுபாட்டை நிவர்த்தி செய்ய, தானங்கள் வாயிலாக பெறப்படும் உறுப்புகளை ஒதுக்குவதில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.* நோய் காரணமாக இறுதி கட்ட உறுப்பு செயலிழப்பு ஏற்படும் போது பெண்கள் சமமாக பாதிக்கப்படக்கூடியவர்கள். இதனால் தானங்கள் வாயிலாக பெறப்படும் உறுப்புகள் வாயிலாக பெண்கள் பலன் அடைய வேண்டும்.* பெண்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு உறுப்புகள் கிடைப்பது முக்கியம். * உறுப்புகள் தானம் பெறப்படும் நபரின் உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தரவுகள் சொல்வது என்ன?
2024-25ம் ஆண்டில் இந்தியாவில் உறுப்பு தானங்கள் குறித்த ஆண்டு அறிக்கையின்படி, 2024-25ம் ஆண்டில் இந்தியா கிட்டத்தட்ட 19,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இவற்றில், 3,403 (17%) மாற்று அறுவை சிகிச்சைகள் இறந்த நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட உறுப்புகள் அல்லது மூளை சாவு அடைந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட உறுப்புகள். மீதமுள்ளவை உயிர் உடன் உள்ள நபரிடம் இருந்து பெறப்பட்டவை என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.