தசரா வாழ்த்து பெயரில் எதிர்ப்பதா? காங்கிரஸ் அரசு மீது பா.ஜ., கோபம்
பெங்களூரு : தசராவுக்கு வாழ்த்துக் கூறும் பெயரில், எதிர்க்கட்சிகளை விமர்சித்து காங்கிரஸ் அர விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதற்கு பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.இரண்டு, மூன்று ஆண்டுகளாக, பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள் இடையே விளம்பர யுத்தம் நடக்கிறது. இதற்கு முன்பு பா.ஜ., அரசு இருந்தபோது, அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மையின் உருவப்படத்தை போட்டு, காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டது. நாளிதழ்களில் பக்கம், பக்கமாக விளம்பரம் வெளியிட்டு, அரசை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.லோக்சபா தேர்தல் நேரத்தில், இரண்டு கட்சிகளுக்கு இடையே போஸ்டர் யுத்தம் ஜோராக நடந்தது. ஊடகங்கள் வழியாக போஸ்டர், விளம்பரம் வெளியிட்டு பரஸ்பரம் திட்டிக்கொண்டன.தற்போது காங்கிரஸ் அரசு, மக்களுக்கு தசரா வாழ்த்துக்கூறும் பெயரில், விளம்பரம் வெளியிட்டு எதிர்க்கட்சிகளை விமர்சித்தது.'துஷ்ட சக்திக்கு எதிரான யுத்தத்தில் சத்தியத்துக்கு வெற்றி. அரசை கவிழ்க்க துஷ்ட சக்திகள் முயற்சிக்கின்றன. இத்தகைய துஷ்ட சக்திகளை, தாய் சாமுண்டீஸ்வரி தண்டிக்கட்டும்' என நேற்று காலை நாளிதழ்களில், காங்கிரஸ் அரசு விளம்பரம் கொடுத்தது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் அரசு சாடியுள்ளது.இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் பா.ஜ., கூறியுள்ளதாவது:நவராத்திரி என்பதற்கு, ஹிந்து மதத்தில் புராண மகத்துவம் உள்ளது. துர்க்கையின் ஒன்பது அவதாரங்களை ஆராதிக்கும் இந்த பண்டிகையை, ஊழல் முதல்வர் சித்தராமையா, தன் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தியது பெருங்குற்றம்.தவறு செய்த சித்தராமையா, விளம்பரம் அளித்ததால் அவர் செய்த பாவம், ஊழல் சரியாகிவிடாது.ஸ்ரீராமன் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர். உண்மையை நிரூபிக்க, சீதையிடம் இருந்து விலகி, சத்திய சோதனை நடத்தினார். அதே போன்று சித்தராமையாவும், ராமன் பாதையில் நடப்பதானால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, சத்திய சோதனையை எதிர்கொள்ளட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- ஜனார்த்தன ரெட்டி, எம்.எல்.ஏ.,