உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலவச திட்டங்களால் நிதி நெருக்கடி: கர்நாடக காங்., அமைச்சர் புலம்பல்

இலவச திட்டங்களால் நிதி நெருக்கடி: கர்நாடக காங்., அமைச்சர் புலம்பல்

பெங்களூரு:''இலவச வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்திவிட்டு, மாநில அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது,'' என, கர்நாடக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா தெரிவித்தார். கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2023ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை, மகளிருக்கு மாநிலம் முழுக்க இலவச பஸ் பயணம், மாதம் 200 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட ஐந்து இலவச வாக்குறுதி திட்டங்களை அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டது. இந்த இலவச திட்டங்களுக்காக மட்டும் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் 56,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், காங்கிரசைச் சேர்ந்த, மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ராம்நகரில் நேற்று அளித்த பேட்டி: தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால், கர்நாடகா முழுதும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. ஒரு பக்கம் அவர்களுக்கு நிவாரணம் வழங்கா விட்டால், போராட்டத்தில் ஈடுபடுவர். மற்றொரு பக்கம் இலவச திட்டங்களை நிறுத்தி விட்டால், மக்கள் கோபமடைந்து அரசை திட்டுவர். அவசியமோ, அவசியம் இல்லையோ... கொடுத்த வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். இலவச வாக்குறுதி திட்டங்கள் இல்லாதிருந்தால், மாநில அரசுக்கு இத்தகைய நெருக்கடியான சூழ்நிலை வந்திருக்காது. இத்திட்டங்களால், அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறுகிறது. இருந்தாலும், சூழ்நிலையை எப்படியோ சமாளிக்கிறோம். பட்ஜெட்டில் நிர்ணயித்தபடி அனைத்து செலவுகளையும் சமாளிப்பது, அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் உட்பட அனைத்து பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது, மிகவும் கஷ்டமாக உள்ளது. இலவச வாக்குறுதி திட்டங்கள், வளர்ச்சி பணிகளுக்கு இடையே மாநிலத்தை முன்னடத்தி செல்ல அரசு படாதபாடு படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை