புதுடில்லி : அன்னிய செலாவணி மோசடி தொடர்பான புகாரில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கு சொந்தமான அறக்கட்டளை வாயிலாக, நிதியுதவி பெற்ற அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத் துறை நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது.ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் பிறந்த, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், ஓ.எஸ்.எப்., எனப்படும் 'ஓபன் சொசைட்டி பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை வாயிலாக, உலகின் பல நாடுகளில் பல திட்டங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறார். குற்றச்சாட்டு
இவர் அந்த நாடுகளின் தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்தியாவுக்கு எதிரான, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவர் சோரஸ். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா தொடர்புடைய பல அமைப்புகளுக்கு, ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளை நிதியுதவி அளித்துள்ளதாக புகார்கள் உள்ளன. இது தொடர்பாக, பார்லிமென்டிலும் கடும் விவாதம் நடந்துள்ளது.கடந்த, 2016ல், சோரசின் ஓ.எஸ்.எப்., அமைப்பை, கண்காணிப்பு பட்டியலில் மத்திய உள்துறை அமைச்சகம் சேர்த்தது. இதன்படி, முன் அனுமதி பெறாமல், இந்தியாவில் உள்ள என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகள் உள்ளிட்ட வற்றுக்கு நன்கொடைகளை அள்ளிக் கொடுக்க முடியாது. நன்கொடைகள் அளிப்பதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.இந்தக் கட்டுப்பாடுகளை தவிர்ப்பதற்காக, ஓ.எஸ்.எப்., அறக்கட்டளை, இந்தியாவில் உள்ள தன்னுடைய துணை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு, நேரடி அன்னிய முதலீடு மற்றும் ஆலோசனைக் கட்டணம் என்ற பெயரில் பணத்தை அனுப்பியுள்ளது. அந்தப் பணம், இங்குள்ள, அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. 'பெமா'
இது, 'பெமா' எனப்படும் அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்துக்கு எதிரானது. இது தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சோரசின் அறக்கட்டளை வாயிலாக பலன் பெற்ற அரசு சாரா அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு சொந்தமான, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள எட்டு இடங்களில் அமலாக்கத் துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது.
எந்தெந்த நிறுவனங்கள்?
அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சோரசின் ஓ.எஸ்.எப்., மற்றும் முதலீட்டு நிறுவனமான, இ.டி.எப்., எனப்படும் பொருளாதார வளர்ச்சி நிதி வாயிலாக, பல மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 'ஆம்னிஸ்டி' எனப்படும் மனித உரிமைக்கான அரசு சாரா அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. நிதி முறைகேடு தொடர்பான புகாரில், ஆம்னிஸ்டி அமைப்பின் வங்கி கணக்குகளை, மத்திய அரசு, 2020 டிசம்பரில் முடக்கியது. இதையடுத்து அந்த அமைப்பு செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. அதையும் மீறி, இந்த அமைப்புக்கு நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளது.இதைத்தவிர, எச்.ஆர்.டபிள்யூ., எனப்படும் 'ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்' என்ற மனித உரிமைக்கான அரசு சாரா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், இந்தியாவில் உள்ள இ.டி.எப்., வாயிலாக, 'ஆஸ்படா இன்வஸ்ட்மென்ட்ஸ்' என்ற நிறுவனத்துக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், இ.டி.எப்., நிறுவனத்தின், மொரீஷியஸ் நாட்டில் இருந்து செயல்படும் துணை நிறுவனம். ஆலோசனைக் கட்டணம் என்ற பெயரில், இந்த நிறுவனத்துக்கு பணம் வழங்கப்பட்டு, அது மடைமாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.