உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமி பலாத்காரம் செய்து கொலை மேற்கு வங்கத்தில் தொடரும் கொடூரம் போலீஸ் ஸ்டேஷன் தீ வைத்து எரிப்பு

சிறுமி பலாத்காரம் செய்து கொலை மேற்கு வங்கத்தில் தொடரும் கொடூரம் போலீஸ் ஸ்டேஷன் தீ வைத்து எரிப்பு

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை அடுத்து, ஆத்திரமடைந்த உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனை தீ வைத்து எரித்ததால் பதற்றம் நிலவுகிறது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்து உள்ளது, இங்குள்ள தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் மஹிஸ்மாரி கிராமத்தில் வசித்து வந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலைமாயமானார்.

சந்தேகம்

டியூஷனுக்கு சென்ற அவர், நெடுநேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி அலைந்தனர். சிறுமி கிடைக்காததை அடுத்து, அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதை போலீசார் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, அருகில் உள்ள ஜெயநகர் பகுதியில் சதுப்பு நில காடுகள் அமைந்துள்ள இடத்தில், மாயமான சிறுமியின் உடல் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது. உடலில் காயங்கள் இருந்ததால், பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொல்லப்பட்டதாக உறவினர்கள் சந்தேகமடைந்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் மஹிஸ்மாரி பகுதி புறக்காவல் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த போலீசாரை தாக்கினர். புறக்காவல் நிலையத்தையும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் கிராம மக்கள் தீயிட்டு எரித்தனர். இதனால், அங்கிருந்த போலீசார் தப்பியோடினர்.கிராம எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலையில் தடுப்புகளை போட்டு சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை போலீசார் கலைத்தனர். மஹிஸ்மாரி முழுதும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற ஆளும் திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கணேஷ் மோண்டலை, கிராம மக்கள் விரட்டியடித்தனர். 'சிறுமி மாயமானது தொடர்பான புகாரை, போலீசார் அலட்சியப்படுத்தியதாலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 'எப்போது புகார் அளித்தாலும் அவர்கள் அப்படிதான் செயல்படுகின்றனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை, எங்கள் போராட்டம் தொடரும். 'அதேபோல், புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கும் தண்டனை வழங்க வேண்டும். அதுவரை நாங்கள் போராடுவோம்' என, கிராம மக்கள் தெரிவித்தனர்.

விசாரணை

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய போலீசார், சிறுமி கொலையில் சம்பந்தப்பட்ட ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.கடந்த ஆக.,ல், கோல்கட்டா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், அங்கு பணிபுரிந்த பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள், அதேபோல், 10 வயது சிறுமி கொல்லப்பட்டது மேற்கு வங்க மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sathyanarayanan Sathyasekaren
அக் 06, 2024 04:12

எரிக்கப்படவேண்டியது போலீஸ் ஸ்டேஷன் மட்டுமல்ல, அந்த கொடூரனுக்கு அவன் சார்ந்த மதத்தின் காரணமாக ஆதரவு கொடுக்கும் அரசியல் வியாதிகளின் வீடுகளும், இவர்கள் பங்களாதேஷ், ரோஹிங்கிய வில் இருந்து ஊடுருவி குடியிருக்க அனுமதிக்கும் மம்தா பேகத்தின் வீடும் தான்.


முக்கிய வீடியோ