உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம்

அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம்

மும்பை, உடல்நலக் குறைவால் காலமான பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல், முழு அரசு மரியாதையுடன், மும்பையில் நேற்று தகனம் செய்யப்பட்டது.மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வந்த பிரபல தொழிலதி பரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, உடல்நலக்குறைவால், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். இவரது மறைவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். மும்பையின் கொலாபா என்ற இடத்தில் உள்ள ரத்தன் டாடாவின் வீட்டில், அவரது உடல் அஞ்சலிக்காக சிறிது நேரம் வைக்கப்பட்டது. அங்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.இதைத் தொடர்ந்து, தெற்கு மும்பையில் உள்ள தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தில், ரத்தன் டாடாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடல் மீது, தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது.ரத்தன் டாடா உடலுக்கு, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.மேலும், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், அவரது மகளும், எம்.பி.,யுமான சுப்ரியா சுலே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். டாடா குழுமத்தின் ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் ரத்தன் டாடா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, வொர்லியில் உள்ள தகனக் கூடத்துக்கு ரத்தன் டாடா உடல் நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்கு கள் பார்சி மரபுப்படி நடந்தன. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பின்படி, முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடந்தன.துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், பல அரசியல் தலைவர்கள், ரத்தன் டாடா சகோதரர் நோயல் டாடா, டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விமானங்களில் அறிவிப்பு

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள், தங்கள் விமானங்களில், மறைந்த ரத்தன் டாடாவை நினைவுகூரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டன.இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களும் ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவித்தன. ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், அதன் புதிய இந்தியா மற்றும் தெற்காசியா தலைமையகம் மற்றும் டில்லியில் உள்ள பயிற்சி மையத்தின் திறப்பு விழாவை நேற்று ரத்து செய்தது.

'பாரத ரத்னா' விருது

மஹா., அமைச்சரவை தீர்மானம்மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் மும்பையில் நடந்தது. இதில், ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரத்தன் டாடாவுக்கு, நாட்டின் உயரிய விருதான, பாரத ரத்னா வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !