பயங்கரவாதிகளுக்கு எதிரான எந்த தாக்குதலுக்கும் தயார்: ராஜ்நாத் சிங்
புதுடில்லி: ‘‘நம் அண்டை நாடு தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் நிலையில், எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம்,’’ என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். டில்லியில் தனியார் செய்தி டிவி சேனல் சார்பில் ராணுவ மாநாடு நடைபெற்றது. இதில் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். அப்போது அவர் பேசியதாவது: நம் நாடு அமைதியை மட்டுமே நம்புகிறது. போரை விரும்பவில்லை. மற்றொரு நாட்டின் நிலபரப்பை கைப்பற்றவோ, அச்சுறுத்தவோ நாம் விரும்புவதில்லை. அதே சமயம், அமைதியாக இருப்பதற்கும்; பலவீனமாக இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அமைதியை விரும்பும் அதே வேளையில், தேசத்தின் பாதுகாப்பில் எந்த சமரசத்திற்கும் இடம் கிடையாது. நம் அண்டை நாடு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை, பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவொரு தாக்குதலையும் நடத்த நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை உலக நாடுகளுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். நாம் பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம். ஆனால், எந்த நாடாவது பயங்கரவாதத்தை ஊக்குவித்தால், அந்த நாட்டுடன் பேசுவதை நிறுத்திக் கொள்வோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார். தற்சார்பு திறன் அவசியம் ராணுவ தளபதி தீரஜ் சேத் ராணுவ மாநாட்டில் தலைமை தளபதி தீரஜ் சேத் கூறியதாவது: போரில் வெற்றியை தீர்மானிக்கும் ஒரே உறுதியான காரணியாக நிலப்பரப்பு இருக்கும். அந்த நிலப்பரப்பை கைப்பற்றி, பாதுகாத்து, தக்க வைப்பதன் வாயிலாகவே வெற்றி உறுதி செய்யப்படும். தற்போதைய போர்கள் நீண்ட காலம் நீடித்து, இடையிடையே தீவிர தாக்குதல்கள் நடக்கும் வகையில் மாறி வருகின்றன. தொழில்நுட்பம் தாக்குதல்களின் காலத்தை குறைத்தாலும், போரின் காலத்தை குறைக்கவில்லை. நீண்ட கால மோதல்களை எதிர்கொள்ள தற்சார்பு திறன் அவசியம். பிற நாடுகள் வழங்கக்கூடிய பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை சார்ந்திருக்காமல் தற்சார்பு திறனை நாம் வளர்த்து கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.