வளர்ச்சி குறித்து விவாதிக்க தயாரா? மத்திய அமைச்சர் குமாரசாமி சவால்!
பெங்களூரு : ''காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசில், 14 மாதம் நான் முதல்வராக இருந்த போது செய்த வளர்ச்சி பணிகள் குறித்தும், இன்றைய காங்கிரஸ் அரசின் முதல்வர் சித்தராமையா, 15 மாதத்தில் என்ன செய்தார் என்பது குறித்தும் பகிரங்க விவாதத்துக்கு தயாரா,'' என மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:எங்கள் கட்சியில் 38 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். காங்கிரஸ் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றாலும், நல்லாட்சி அளித்தேன். பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ள, காங்கிரஸ் அரசின் முதல்வராக சித்தராமையா என்ன செய்தார் என்பதை பற்றி, விவாதிக்கட்டும்.கொடுத்த குதிரையில் ஏற தெரியாதவர் என, என்னை சித்தராமையா விமர்சித்துள்ளார். வாயை திறந்தால் அவர் மீது எங்களுக்கு வயிற்றெரிச்சல் என்கிறார். கவுரவமாக வீட்டில் இருந்த தன் மனைவியை, வெளியே கொண்டு வந்தவர்கள் எதிர்க்கட்சியினர் அல்ல. சித்தராமையாதான்.காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசில், 14 மாதம் நான் முதல்வராக இருந்த போது செய்த வளர்ச்சி பணிகள் குறித்தும், இன்றைய காங்கிரஸ் அரசின் முதல்வர் சித்தராமையா, 15 மாதத்தில் என்ன செய்தார் என்பது குறித்தும் பகிரங்க விவாதத்துக்கு தயாரா.அவ்வப்போது அஹிந்தா என்கிறார். இந்த பிரிவினருக்காக அவர் என்ன செய்துள்ளார். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் கொள்ளை அடித்தது தெரியாதா. தென் மேற்கு பருவமழை வழக்கத்தை விட, அதிகமாக பெய்தும் ஏரிகளுக்கு நீர் நிரப்பவில்லை. மலவள்ளி பகுதியில் தண்ணீர் விடாததால், நாற்று நட முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டீர்கள்.இத்தனை நாட்களாக ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை பற்றி பேசாதவர்கள், இப்போது பேசுகின்றனர். இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது. மக்களின் எந்த பிரச்னைகளுக்கும், காங்கிரஸ் அரசு தீர்வு காணவில்லை. சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உறங்க முடியாமல் பரிதவித்தன. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. அசம்பாவிதங்களை ஏற்படுத்தியது.இவ்வாறு அவர் கூறினார்.