புதுடில்லி இந்திய குடிமக்களை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் செய்வதற்கான விதிகளை கடுமையாக்கும்படி, மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு, சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. நம் நாட்டில் உள்ளவர்கள் என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களை திருமணம் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதில், பல மோசடிகள் அரங்கேறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர் திருமண சட்டங்களில் உள்ள விதிகளை கடுமையாக்க வேண்டும் என, சட்ட கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்கு, நீதிபதி ரித்து ராஜ் தலைமையிலான சட்ட கமிஷன் அளித்த அறிக்கை: இந்தியாவில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் செய்து, மோசடி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இந்த திருமணங்களில், ஏமாற்றும் போக்கு அதிகரித்து வருவதால் பெண்கள் ஆபத்தான சூழலுக்கு தள்ளப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினர் உடனான இந்திய குடிமக்களின் திருமணங்களை, இந்தியாவில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். விவாகரத்து, துணையை பராமரிப்பது, குழந்தைகளை பராமரிப்பது, நிர்வகிப்பது, சம்மன், நீதித்துறை ஆவணங்கள் அனுப்புவது தொடர்பாக புதிய சட்டத்தில் விதிமுறைகளை வகுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இருவரின் பாஸ்போர்ட்களிலும், அவர்களின் திருமண பதிவு எண்ணை குறிப்பிடுவதற்கு, தேவையான திருத்தங்கள் பாஸ்போர்ட் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற திருமணங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, உள்ளூர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.