உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தந்தையின் மரணத்தை மறைத்து மகளுக்கு மணம் முடித்த உறவுகள்

தந்தையின் மரணத்தை மறைத்து மகளுக்கு மணம் முடித்த உறவுகள்

சிக்கமகளூரு : திருமணத்துக்கு முந்தைய நாள், மணமகளின் தந்தை விபத்தில் இறந்துவிட, இவ்விஷயத்தை மனைவிக்கும், மகளுக்கும் தெரிவிக்காமல், உறவினர்கள் திருமணம் செய்து வைத்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரேயைச் சேர்ந்தவர் சந்துரு, 45. இவரது மகள் திக் ஷிதா, 20. இவருக்கு நேற்று காலை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருமண பதிவுக்கு தேவையான ஆவணங்கள் தயார் செய்வதற்காக, நண்பருடன் இரு சக்கர வாகனத்தில், சந்துரு நேற்று முன்தினம் காலை ஹுலிதிம்மாபுராவுக்கு சென்றார். அப்பணியை முடித்து, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில், சந்துருவும், நண்பரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி, சந்துரு இறந்து விட்டார்.இத்தகவல், சந்துருவின் உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும், மற்ற உறவினர்களும் சேர்ந்து, இவ்விஷயத்தை கூறி, திருமணம் நின்றால் சந்துருவின் கனவு நிறைவேறாது என்பதால், சந்துரு இறப்பை மறைத்துவிட முடிவு செய்தனர்.நேற்று முன்தினம் மாலையில் நடந்த திருமண வரவேற்பில் சந்துரு இல்லாததால் அவரது மனைவியும், தந்தையை காணாது மகளும் தவித்தனர். அவர்களிடம் உறவினர்கள், 'திருமணத்துக்காக அங்கும் இங்கும் அலைந்ததால், சற்று தளர்வடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ளார்' என சமாளித்தனர்.நேற்று காலை முகூர்த்தம் வரை இதையே கூறி சமாளித்தனர். தாலி கட்டி முடித்த பின், சந்துரு மரண செய்தியை தெரிவித்தனர். இதை கேட்ட அனைவரும் கதறி அழுதனர். திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. திருமண கோலத்தில் மருத்துவமனைக்கு சென்ற திக் ஷிதா, தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

VENKATASUBRAMANIAN
ஜன 21, 2025 07:46

புத்திசாலியான உறவினர்கள். உளறியிருந்தால் அந்த பெண்ணின் வாழ்க்கை கேள்வி குறி ஆகியிருக்கும்.


Kasimani Baskaran
ஜன 21, 2025 07:14

சிக்கல்தான். தந்தை என்றால் ஓராண்டுக்கு எந்த சுபகாரியமும் கூடாது என்பதுதான் நடைமுறை. முன்னோர்களின் ஆசீர்வாதம் வேண்டுவோர் மரபுகளை மதிப்பார்கள்.


Rajathi Rajan
ஜன 21, 2025 12:30

உன் நடைமுறையை தூக்கி உன் வீடு பரண் மேல் போடு, மூடநம்பிக்கை ...


BALACHANDRAN
ஜன 21, 2025 07:05

எவ்வளவோ விஷயங்கள் இது மாதிரி நடக்கிறது. முக்கியமாக அரசியல்வாதிகள் மனிதநேயத்துடன் நடக்கும் சம்பவங்களைப் பார்த்து மக்களை சந்திக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். அந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ராதே கிருஷ்ணா


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜன 21, 2025 07:00

திட்டமிட்டபடி திருமணம் நடந்ததால் நிச்சயமாக தந்தையின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும் என்பது நிச்சயம்.


Svs Yaadum oore
ஜன 21, 2025 06:38

இரு சக்கர வாகனத்தில், சென்றாராம். எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில், படுகாயம், சிகிச்சை பலனின்றி, இறப்பு ..இது கர்நாடகாவில் .....இங்கு சென்னையில் சராசரியாக தினமும் ஒருவர் சாலை விபத்தில் மரணம் .....உயிருக்கு மதிப்பில்லை ....சாலை விதிகளை யாரும் மதிப்பதில்லை ...ஹெல்மெட் அணிவதில்லை ....கடைசியில் குடும்பமும் உறவுகளும் இப்படி தத்தளிக்குது ....


D.Ambujavalli
ஜன 21, 2025 05:34

பெரும் செலவு செய்து ஏற்பாடு எய்த திருமணம் நின்றுவிட்டால், சகுனத்தடையென்று பிள்ளை வீட்டார் நிறுத்திவிடவும் கூடும் இதே போல், விபத்து இல்லை, கடும் நோயுடன் போராடிவந்த தந்தையின் கண் முன்பு திருமணம் நடத்த எல்லா ஏற்பாடும் நடந்து வருகையில், முதல் நாள் நம்பிக்கையற்ற நிலையில் மருத்துவ மனையில் சேர்த்தனர். பெண்ணின் அண்ணன் க்ளயணத்தை நடத்தி முடிக்கும்வரை அவர் ventilator இல் இருப்பதாகவே கூறிவந்தனர். திருமணம் முடிந்தபின் செய்தியைக் கூறினர் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை