யாத்கிர் நாராயணபுரா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!: கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு
யாத்கிர்: யாத்கிர் நாராயணபுரா அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் மேல், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யாத்கிர், பாகல்கோட் மாவட்ட கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. மாநிலத்தின் வடமாவட்டங்களான யாத்கிர், ஹாவேரி, கதக், விஜயபுரா, கொப்பால், கலபுரகி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. துண்டிப்பு
யாத்கிர் நாராயணபுரா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து பெய்யும் கனமழையால் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.மொத்தம் 33.31 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 32.51 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் தொடர்ந்து அதிகரிப்பதால், அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல், தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.யாத்கிரின் ஷகாபுரா தாலுகாவில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள, பல தரைப்பாலங்கள் மூழ்கின. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.பாகல்கோட்டின் பாதாமி, குலேதகுட்டா தாலுகாக்களில், கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. யாத்கிர், பாகல்கோட் ஆகிய மாவட்டங்களில் கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்று பக்கம் செல்ல வேண்டாம் என, மக்களை தாசில்தார்கள் எச்சரித்துள்ளனர்.யாத்கிரின் சிந்தனஹள்ளி கிராமத்தில் நேற்று காலை பெய்த கனமழைக்கு, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் குஞ்சலம்மா, 62, என்ற மூதாட்டி உயிரிழந்தார்.ஷகாபுராவின் கூலுார் கிராமத்தில் சூறைக்காற்றுடன் பெய்த, கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. கதக்கில் பெய்த கனமழையால், கதக் டவுனில் உள்ள இந்திரா கேன்டீனை வெள்ளம் சூழ்ந்தது.கொப்பால் தாலுகாவின் ஜிராலா கல்குடி, அகலகும்பி, கடபுரா, கலகேரி, கோரவி ஹஞ்சினாலா கிராமங்களில், விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், நெற்பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டன. புடகுந்தி கிராமத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் பாய்ந்து காளை மாடு இறந்தது.வடமாவட்டங்களில் பெய்யும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேக மூட்டம்
பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக, மழை பெய்யாமல் இருந்தது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12:00 மணிக்கு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. ராஜாஜிநகர், சிவாஜிநகர், விதான் சவுதா, கப்பன் பார்க், பசவேஸ்வராநகர், விஜயநகர், அத்திகுப்பே உட்பட நகர் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது.இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், ரயில்வே சுரங்கப் பாதை, மரங்களின் கீழ் தஞ்சம் புகுந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. பின், திடீரென வெயில் அடித்தது. இரவு 7:00 மணிக்கு மீண்டும் மழை பெய்தது.வேலை முடிந்து வீட்டிற்கு, இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிரமம் அடைந்தனர். போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.பெங்களூரு அருகே உள்ள ராம்நகர் மாவட்டத்தின் ராம்நகர், பிடதி, சென்னப்பட்டணா, ஹரோஹள்ளி, கனகபுரா, மாகடி ஆகிய பகுதிகளில், நேற்று மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை, இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது.