உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழை பாதித்த 63 குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி

மழை பாதித்த 63 குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி

பெங்களூரு : ''பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட 63 குடும்பங்களுக்கு, மாநகராட்சி சார்பில் தலா 10,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்,'' என, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் அறிவித்துள்ளார்.பெங்களூரு நகரில், இம்மாதம் 5, 6ம் தேதிகளில் பலத்த மழை பெய்தது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தும், புகுந்தும் பாதிப்பை ஏற்படுத்தியது.வழக்கம் போல், எலஹங்கா பகுதியில் உள்ள கேந்திர விஹார் அடுக்குமாடி குடியிருப்பு உட்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதுபோன்று, மஹாலட்சுமி லே - அவுட்டிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, 5ம் தேதி இரவு மட்டுமே 10.82 செ.மீ., மழை பதிவானது தெரியவந்தது.மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து, மண்டல கமிஷனர்கள், தலைமை கமிஷனரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் 63 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.'அந்த குடும்பங்களுக்கு, மாநகராட்சி சார்பில் தலா 10,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்' என, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் அறிவித்துள்ளார். ஓரிரு நாளில் சம்பந்தப்பட்ட மண்டல கமிஷனர்கள், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண நிதி வழங்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ