அப்புறப்படுத்துவதை கண்டித்து சாலையோர வியாபாரிகள் பேரணி
புதுடில்லி:சட்ட விரோதமாக அப்புறப்படுத்தப்படுவதை கண்டித்து, டில்லியில் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றனர்.டில்லியின் ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த புதன்கிழமை நடந்த இந்த பேரணியில், சாலைகளில் பொருட்களை விற்போர், ரிக் ஷா டிரைவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், குடிசைப்பகுதிகளில் குடியிருப்போர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களை முறைகேடாக அவதுாறு செய்பவர்கள், சட்ட விரோதமாக அப்புறப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அதை வலியுறுத்தி அவர்கள் பேரணியாக சென்றனர். காங்கிரஸ் தலைவர் அபிேஷக் தத் இதுகுறித்து கூறும் போது, ''சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை, எங்களின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நிறைவேற்றினோம். அந்த சட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். அந்த சட்டம் முறையாக பின்பற்றப்பட வேண்டும்,'' என்றார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'அழகிய கட்டடங்கள் மற்றும் சிமென்ட், ஸ்டீலால் மட்டும் நகரங்கள் அழகாக மாறாது. அவற்றை கட்டிய தொழிலாளர்களின் வியர்வை துளிகள் பேசப்பட வேண்டும். அப்போது தான், உண்மையான வளர்ச்சி கிடைக்கும்' என தெரிவித்து உள்ளார்.