போலீசை கத்தியால் குத்திய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு
புதுடில்லி:தலைமை போலீஸ்காரரை கத்தியால் குத்திய கொள்ளையன், துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார்.முசார்பிர் மார்க்கில் மே, 27ம் தேதி தலைமைப் போலீஸ்காரர்கள் கரண் மற்றும் பவன் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது, ஒரே பைக்கில் வந்த இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.இருவரையும் விசாரிக்க அழைத்தனர். அதில் ஒருவர் தப்பினார். மற்றொருவரைப் பிடிக்க கரண் முயன்ற போது, கத்தியால் குத்தி விட்டு அவரும் தப்பி ஓடினார். இருவரும் வந்த பைக் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அது திருடப்பட்டது என்பது தெரிய வந்தது.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இருவரையும் போலீசார் தேடி வந்தனர். கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடியது ராஜா மற்றும் ஆசிப் என அடையாளம் கண்டுபிடித்தனர். கடந்த 30ம் தேதி ராஜா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் டில்லி - -மும்பை விரைவுச் சாலையில் கடந்த, 2ம் தேதி, பைக்கில் வந்த ஆசிப்பை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால், ஆசிப் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டார்.போலீசார் கொடுத்த பதிலடியில், ஆசிப் வலது காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். அவரை கைது செய்த போலீசார், எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஜெய்த்பூர் டாங்கி சாலையில் வசிக்கும் ஆசிப் போதைக்கு அடிமையானவர். போதைப் பொருள் வாங்க கொள்ளை, வழிப்பறி மற்றும் வாகன திருட்டு ஆகிய குற்றங்களை செய்துள்ளார். அவர் மீது ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிப் மே 14ம் தேதி ஜாமினில் வந்தார்.