உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேவனஹள்ளி - விஜயபுரா - ஹெச்.கிராஸ் - மாலுார் சாலையை தரம் உயர்த்த ரூ.3,190 கோடி நிதி ஒப்புதல்

தேவனஹள்ளி - விஜயபுரா - ஹெச்.கிராஸ் - மாலுார் சாலையை தரம் உயர்த்த ரூ.3,190 கோடி நிதி ஒப்புதல்

பெங்களூரு: விமான நிலையம் சீரமைப்பு, சாலைப் பணிகள் உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க முதல்வர் சித்தராமையா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.பெங்களூரின், விதான்சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பின், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:அமைச்சரவை கூட்டத்தில், 30 விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை வாரியத்தில், மாநில அரசின் பங்களிப்பு அளவு, 49 சதவீதத்தில் இருந்து, 90 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சாலை தரம்

புதிய சுற்றுலா கொள்கை - 2024க்கு, ஷிவமொக்காவின், சோகானே கிராமத்தில் உள்ள விமான நிலைய மேம்பாட்டுக்கு 27.44 கோடி ரூபாய் நிதி வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது.தேவனஹள்ளி - விஜயபுரா - ஹெச்.கிராஸ் - மாலுார் எல்லை வரை, 110 கி.மீ., தொலைவிலான சாலையை தரம் உயர்த்த 3,190 கோடி ரூபாய் நிதி வழங்க ஒப்புதல்.கர்நாடக வீட்டு வசதி வாரியம், பெங்களூரின், ஆனேக்கல் தாலுகா, சூர்யாநகர் 1வது ஸ்டேஜில், மனை எண் 953, 454 மற்றும் 455ல், அதிநவீன வசதிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்ட, 101 கோடி ரூபாய் திட்டத்துக்கு அனுமதி.சிக்கமகளூரு, மூடிகெரேவின், சாரகோடு வனப்பகுதி எல்லையில் வசித்த 19 பேர் வெளியேற்றப்பட்டனர். இவர்களுக்கு மாற்று வசதி செய்ய, மூடிகெரேவின், ஹாதிஓனி கிராமத்தில் 33.24 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், விவசாயம் செய்ய இரண்டு ஏக்கர் நிலமும், வீடு கட்டி கொள்ள நான்கு சென்ட் நிலமும் இலவசமாக வழங்க ஒப்புதல்.

மாணவர்கள்

பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளின் நான்காம், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2024 - 25 கல்வியாண்டில், கல்விக்கு தேவையான பொருட்கள் வழங்கவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும், 14.24 கோடி ரூபாய் வழங்கல்.சமூக நலத்துறை, பொது உரிமை இயக்குனரகத்தின், 33 பிரிவுகளை சிறப்பு போலீஸ் நிலையங்கள் என, அறிவித்து, இவற்றை நிர்வகிக்க தேவையான 450 பணியிடங்களை நிரப்ப திட்டம். சந்தன கடத்தல் வீரப்பனை பிடித்த எஸ்.டி.எப்., செயற்படையில் பங்கேற்றிருந்த போலீசாருக்கு வீட்டுமனை அளிக்கும் திட்டம், அதே படையில் பணியாற்றிய சுகாதாரம்குடும்ப நலத்துறையின் ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரி மற்றும் இரண்டு ஓய்வு பெற்ற செவிலியர்களுக்கும் விஸ்தரிக்கப்படும். இவர்களுக்கு சாம்ராஜ்நகர் - ராமசமுத்ரா நகர மேம்பாட்டு ஆணையம் அமைத்த லே அவுட்களில், வீட்டு மனைகள் வழங்கப்படும்.பாகல்கோட், முதோல் நகருக்கு குலபாளா கிராமத்தின் அருகில், கிருஷ்ணா ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகிக்க, 177.10 கோடி ரூபாய் வழங்குவது உட்பட, பல நல திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி