| ADDED : ஆக 17, 2011 02:37 AM
கோல்கட்டா: காந்தியவாதி அன்னா ஹசாரேவின் பொதுச்சேவையை பாராட்டி ,ரூ. 1 லட்சம் வெகுமதியினை மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே உயரதிகாரி ஒருவர் வழங்கவுள்ளார். மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவினை தலைமையிடமாக கொண்ட தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் வர்த்தகபிரிவு தலைமை பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சுபாஷ்சர்கார் (64) என்பவர் , தனது மனைவி உமாவுடன் கோல்கட்டா நகரின் தக்ஷினேஸ்வர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது ஒரே மகன் இறந்த நினைவு நாளான வருடந்தோறும் அக்டோபர் 19-ம் தேதியன்று, பொதுவாழ்விலும், பொதுச்சேவையிலும் சிறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தேடிப்போய் ரூ. 1 லட்சம் வெகுமதி வழங்கி கெளரவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி தற்போது ஊழலை எதிர்த்து போராடி திகார் சிறை சென்றுள்ள காந்தியவாதி அன்னா ஹசாரேவின் பொதுச்சேவையினை பாராட்டி ரூ. 1லட்சம் வெகுமதி வழங்கவிருப்பதாக சுபாஷ்சர்கார் தெரிவித்தார். இப்பரிசு தொகையினை ஹசாரே ஏற்றுக்கொள்வாரா, இல்லையா என்பது எங்களுக்கு பெரும் சந்தேகமாக உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் சுபாஷ்சர்கார் சுயேட்சையாக ‘ரானாகட்’ தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.