உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை ரோப்வே: அரசு போர்ட்டலில் வெளியீடு

சபரிமலை ரோப்வே: அரசு போர்ட்டலில் வெளியீடு

சபரிமலை:சபரிமலை ரோப் வே திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதிக்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிவேஷ் போர்ட்டலில் வெளியிடப்பட்டுள்ளது.சபரிமலையின் நீண்ட நாள் கனவு திட்டமான ரோப்பே திட்டம் தற்போது நிறைவேறும் நிலைக்கு வந்துள்ளது. வனத்துறை தொடர்ந்து தடை ஏற்படுத்தி வந்த நிலையில் கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வனத்துறை, தேவசம்போர்டு, வருவாய்த்துறை இணைந்து நிலம் அளவீடு செய்து முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்காக வனத்துறை வழங்க வேண்டிய 4.67 எக்டேர் வன பூமிக்கு பதிலாக கொல்லம் மாவட்டம் செந்தூரணியில் பதில் நிலம் வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து ரோப்பே பணிகள் துரிதமடைந்துள்ளது. வன பூமி வழங்குவதற்கும் சுற்றுச்சூழல் அனுமதிக்கும் வேண்டி வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிவேஷ் போர்ட்டலில் இந்த திட்டம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வனவிலங்கு சரணாலயத்துடன் சேர்ந்துள்ள பகுதிகளில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமெனில் இந்த போர்ட்டலில் அது பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும்.இதன் அடுத்த கட்டமாக பம்பை ஹில்டாப் முதல் சன்னிதானம் வரை ரோப்வே பாதை கடந்து செல்லும் காட்டுப் பகுதியில் பெரியாறு புலிகள் சரணாலய துணை இயக்குனரும், ரான்னி வன அதிகாரியும் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும். இது அடுத்த சில நாட்களில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. அதன் பின்னர் இவர்கள் முதல்வர் தலைமையிலான கமிட்டிக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள். இந்த அறிக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பித்ததும் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் மகரஜோதி முடிந்த அடுத்த சில நாட்களில் இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெறும். 2.7 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த ரோப்வேயில் 60 மீட்டர் உயரமுள்ள ஐந்து தூண்கள் அமைக்கப்படுகிறது. 80 மரங்கள் வெட்டப்படும். 10 நிமிடங்களில் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் வந்து சேரும். 40 முதல் 60 கேபிள் கார்கள் இதில் இருக்கும்.முதற்கட்டமாக பொருள்கள் கொண்டு வருவதற்கும், நோய்வாய்ப்பட்டவர்களை கொண்டு செல்வதற்கும் இது பயன்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ