மேலும் செய்திகள்
கார்த்திகை மாத அமாவாசை களைகட்டிய கோவில்கள்
01-Dec-2024
கர்நாடகாவில் புராதன பிரசித்தி பெற்ற, சிவன் கோவில்கள் உள்ளன. இவற்றில் தட்சிண கன்னடாவில் உள்ள சஹஸ்ர லிங்கேஸ்வரா கோவிலும் ஒன்றாகும்.தட்சிண கன்னடா மாவட்டத்தின் ஜீவநதிகளான நேத்ராவதி மற்றும் குமாரதாரா சங்கம தலமான உப்பினங்கடி ஆற்றங்கரையில், சஹஸ்ர லிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இது பிண்டம் வைப்பதற்கு பிரசித்தி பெற்ற தலமாகும். இது சிவன், பார்வதி குடிகொண்டுள்ள கோவிலாகும்.கோவில் வளாகத்தில், மஹா காசி சன்னதி உள்ளது. சஹஸ்ர லிங்கேஸ்வரா கோவில் 2,500 ஆண்டுகள் பழமையானது. மஹாபாரத யுத்தத்துக்கும், கோவிலுக்கும் தொடர்புள்ளது.குருஷேத்ர யுத்தம் முடிந்த பின், பலரை கொன்ற பாவம் பாண்டவர்களை பீடிக்கிறது. இதை எப்படி நிவர்த்தி செய்வது என, கிருஷ்ணரிடம் ஆலோசனை கேட்கின்றனர். கிருஷ்ணரும் ராஜசூய யாகம் நடத்தும்படி ஆலோசனை கூறுகிறார்.இந்த யாகம் நிறைவடைய வேண்டுமானால், ஹிமாலயாவில் உள்ள மனித உடல், சிங்கத்தலை கொண்ட விலங்கை பலி கொடுக்க வேண்டும். இது மிகவும் வேகமாக ஓடும் விலங்காகும். பீமன் காற்றை விட வேகமாக ஓடும் திறன் கொண்டவர். எனவே, இவரை அனுப்புகின்றனர்.பீமனும் ஹிமாலயாவுக்கு புறப்படுகிறார். வழியில் ஆஞ்சனேயர் வயதான உருவத்தில் காட்டில் படுத்திருக்கிறார். இவரது வால் வழியை மறிப்பது போன்று இருக்கிறது. படுத்திருப்பது ஆஞ்சனேய சுவாமி என்பதை அறியாத பீமன், வாலை சுருட்டும்படி கூறுகிறார். அப்போது ஆஞ்சனேயர், எனக்கு வயதாகிவிட்டது. வாலை நகர்த்த முடியவல்லை. நீயே ஓரமாக நகர்த்தி விட்டு செல் என்கிறார்.அதன்படியே பீமன், வாலை நகர்த்த முயற்சிக்கிறார். ஆனால் அசைக்கவே முடிவதில்லை. அப்போதுதான் படுத்திருப்பது ஆஞ்சனேயர் என்பது, பீமனுக்கு புரிகிறது. கை கூப்பி வணங்குகிறார். அவரது பயண நோக்கத்தை அறிந்த ஆஞ்சனேயர், அந்த விலங்கின் சிறப்பு குணங்கள் குறித்து விவரிக்கிறார். அதி வேகமாக ஓடும் என்பதால், பிடிப்பது கஷ்டம். எனவே தன் உடலில் உள்ள ரோமங்களை பீமனிடம் கொடுக்கிறார்.அந்த விலங்கு உன்னை விரட்டி வரும். அது உன்னை நெருங்கும் போது ஒரு ரோமத்தை பூமியில் போட்டுவிடு. அது சிவலிங்கமாக மாறும். நீ தேடி செல்லும் விலங்கு சிவ பக்தி கொண்டது. லிங்கத்தை கண்டதும் பூஜை செய்யும். வேறு எந்த வேலையும் செய்யாது. எளிதில் பிடிக்கலாம் என, கூறுகிறார்.அதன்படி பீமனும், விலங்கை பிடித்து கொண்டு, உப்பினங்கடி அருகில் வரும் போது, தன் கையில் மிச்சம் இருந்த, ஆஞ்சனேயரின் ரோமங்களை நிலத்தில் போடுகிறார். இதனால் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் உருவெடுக்கின்றன. அந்த இடமே சஹஸ்ர லிங்கேஸ்வரா கோவிலாகும். நேத்ராவதி நதிக்குள் இருக்கும் இந்த லிங்கங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.திருத்தலத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சஹஸ்ர லிங்கேஸ்வராவை தரிசிக்கின்றனர். 1934ல் இங்கு புதிய கோவில் கட்டப்பட்டது. 1953ல் விக்ரகம் செதுக்கப்பட்டது. பிரபல சிற்பி ரஞ்சலா கோபால் ஷெனாய், எந்த ஊதியமும் பெறாமல் விக்ரகத்தை செதுக்கி கொடுத்தார். -நமது நிருபர் -
01-Dec-2024