உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்லைனில் துப்பாக்கி விற்பனை: வாங்கியவரும் கைது

ஆன்லைனில் துப்பாக்கி விற்பனை: வாங்கியவரும் கைது

முசாபர்நகர், உத்தர பிரதேசத்தில், 'ஆன்லைன்' வாயிலாக ஆயுதங்கள் விற்பனை செய்தவர்கள், வாங்கியவர்கள் உட்பட ஏழு பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.உத்தர பிரதேசத்தில், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக, ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த ஆயுத விற்பனை கும்பல், வாடிக்கையாளர் ஒருவருக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யப் போவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, முசாபர்நகரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆயுதங்களை சப்ளை செய்யும் போது, குற்றவாளிகளை கையும் களவுமாக போலீசார் பிடித்தனர்.அஸாம் ரிஸ்வி, விவேக் நாகர், மணிஷ் குமார், பிரதீப் குமார், ரிஷப் பிரஜாபதி, விஷால் மற்றும் பிரதிக் தியாகி உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். இதில், விஷால் மற்றும் பிரதீப் ஆகியோர் ஆயுதங்களை பெற்றுக் கொள்ள வந்தவர்கள்; மற்றவர்கள் அதை விற்பனை செய்தவர்கள். இந்த கும்பல், ஆயுதங்களுக்கான ஆர்டர்களை சமூக ஊடகங்கள் வாயிலாக ஏற்று, ஆன்லைன் வாயிலாக பணம் பெற்றுக் கொள்கின்றனர். அதன்பின், அவர்கள் கூறும் இடத்தில் வைத்து ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுவதாக முசாபர்நகர் போலீஸ் எஸ்.பி., சத்யநாராயண் பிரஜாபதி தெரிவித்தார்.இதில், ரிஸ்வி என்பவர் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், சட்டவிரோத துப்பாக்கி விற்பனையில் அவர் நீண்ட காலம் ஈடுபட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஐந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், இருசக்கர வாகனம், கார் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள், உ.பி., சுற்று வட்டார பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வருவது, விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ