உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிளாக் பக் மான்களுக்கு   ஹாவேரியில் சரணாலயம்

பிளாக் பக் மான்களுக்கு   ஹாவேரியில் சரணாலயம்

பொதுவாக மான்கள் என்றால் குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும். அது துள்ளி குதித்து ஓடும் காட்சிகளை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மான்களில் சில வகைகளும் உள்ளன. இதில், 'பிளாக் பக்' வகை மான்களை மிகவும் அரிதாகவே பார்க்க முடியும். ஆனால் பிளாக் பக் வகை மான்களுக்காக, கர்நாடகாவில் தனி சரணாலயமே உள்ளது. ஹாவேரியின் ராணிபென்னுார் டவுனில் 119 சதுர கி.மீ., பரப்பளவில் நீலகிரி மரங்கள், புதர் நிறைந்த காடுகளை கொண்டு சூழப்பட்ட ஒரு சரணாலயம் உள்ளது. இங்கு, 'பிளாக் பக்' வகை மான்கள் அதிகளவில் வசிக்கின்றன. இங்கு 104.13 கி.மீ., பரப்பளவில் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர். மீதம் 14.87 கி.மீ., பரப்பளவுக்கு அனுமதிக்கப்படுவது இல்லை. ஏன் என்றால் இந்த இடம் சரணாலயத்தின் மைய பகுதியாக உள்ளது. எங்காவது வழி தவறி சென்று விட கூடாது என்பதற்காக அங்கு நுழைய அனுமதி இல்லை. பிளாக் பக் மான்களை தவிர, கருப்பு ட்ரோங்கோ, சிர்கீர் குக்கூ, மயில், நரி, லங்கூர் குரங்கு, காட்டு பன்றி, முயல், முள்ளம்பன்றி, கீரி ஆகியவையும் இந்த சரணாலயத்தில் உள்ளன. சரணாலயத்தில் 6,000க்கும் மேற்பட்ட பிளாக் பக் மான்கள் உள்ளன. இந்த மான்களை பாதுகாக்கும் நோக்கில் 1974ல் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயம் என்று அறிவிக்கப்பட்டது. இங்கு ஏராளமான பறவைகளையும் பார்க்கலாம். காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாரத்தின் அனைத்து நாட்களும் இந்த சரணாலயம் திறந்து இருக்கும். நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 50; குழந்தைகளுக்கு 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டினருக்கு 300 ரூபாய் கட்டணம். பார்க்கிங் வசதியும் உள்ளது.பிப்ரவரி, மார்ச் சரணாலயத்தை பார்வையிட ஏற்ற மாதங்கள் ஆகும். பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து ஹாவேரி, ராணிபென்னுாருக்கு அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் உள்ளது. ரயில் சேவையும் உள்ளது. பெங்களூரில் இருந்து ராணிபென்னுார் 304 கி.மீ., துாரத்தில் உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை