அவதுறாக பேசிய வழக்கில் சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை
மும்பை, பா.ஜ., முன்னாள் எம்பி., மற்றும் அவரின் மனைவி ஊழல் செய்ததாக அவதுாறு பரப்பியது தொடர்பான வழக்கில், சிவசேனா உத்தவ் பிரிவு எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு மஹாராஷ்டிர நீதிமன்றம் 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்தது. அடுத்த சில மணி நேரங்களில் அவருக்கு ஜாமின் அளிக்கப்பட்டது. மஹாராஷ்டிராவின் மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சியில் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.இதில், 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக, சிவசேனா உத்தவ் பிரிவைச் சேர்ந்த எம்.பி., சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியிருந்தார். நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்த விவகாரத்தில் பா.ஜ., முன்னாள் எம்.பி., கிரித் சோமையா மற்றும் அவரது மனைவி மேதாவுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து சஞ்சய் ராவத் மீது மும்பை நீதிமன்றத்தில் மேதா அவதுாறு வழக்கு தொடர்ந்தார். அதில், 'பொய்யான ஊழல் குற்றச்சாட்டு வாயிலாக என் மீதும், கணவர் மீதும் சஞ்சய் ராவத் அவதுாறு பரப்பியுள்ளார். பொதுமக்கள் மத்தியில் எங்கள் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த மசகான் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சஞ்சய் ராவத் குற்றவாளி என தீர்ப்பளித்து 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் ஜாமின் பெறுவதற்காக தண்டனையை, 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவிடப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் ஜாமின் கோரி சஞ்சய் ராவத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் அளித்தது.