உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி.,யில் பாதுகாப்பு விதிமீறல்: சுவர் ஏறி குதித்த நபரால் பரபரப்பு

பார்லி.,யில் பாதுகாப்பு விதிமீறல்: சுவர் ஏறி குதித்த நபரால் பரபரப்பு

புதுடில்லி: டில்லியில், பார்லிமென்ட் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து உள்ளே நுழைய முயன்ற மர்ம நபரை, போலீசார் நேற்று கைது செய்தனர். பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. ஒரு மாதம் நடந்த கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே, 14 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன. இந்நிலையில், பார்லிமென்ட் வளாகத்தின் உள்ளே மர்ம நபர் ஒருவர் நேற்று சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைய முயன்றார். பார்லி.,யின் பக்கத்தில் உள்ள ரயில் பவனின் சுவர் மீது ஏறிய அந்த நபர், நேற் று காலை 5:50 மணிக்கு புதிய பார்லிமென்ட் வளாகத்தில் குதித்தார். அங்கிருந்த கருடா நுழைவாயிலை நோக்கி அவர் ஓடினார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மற்றும் டில்லி போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பார்லி., வளாகத்தில் குதித்த நபர் உத்தர பிரதேசத்தின் படோஹி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். 'ராம்குமார் பிந்த், 19, என்ற அந்த நபர், குஜராத்தின் சூரத்தில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிகிறார். மனநிலை சரியில்லாதவர் என தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. டில்லியில் உள்ள பார்லி., முழுதும் பாதுகாப்பு வளையத்திற்குள் எப்போதும் இருக்கக் கூடிய பகுதியாகும். குறிப்பாக, 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் சி.ஐ.எஸ்.எப்., மற்றும் டில்லி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். இந்த சூழலில், மர்ம நபர் ஒருவர் சுற்றுச்சுவர் ஏறி பார்லி., வளாகத்தில் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை