உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாங்களும் ஓடுவோமுல்ல ா! கெத்து காட்டிய எருமைகள்

நாங்களும் ஓடுவோமுல்ல ா! கெத்து காட்டிய எருமைகள்

பொதுவாக கிராமங்களில் ஜல்லிக்கட்டு, எருமைகள் ஓட்டம், ஆட்டுக் கிடாக்கள் சண்டை போன்ற சாகச விளையாட்டுகள் ஏற்பாடு செய்வது சகஜம். ஆனால் பெலகாவி போன்ற மாநகரில், எருமை ஓட்டம் நடக்கிறது. இந்த விளையாட்டு பல நுாற்றாண்டு வரலாறு கொண்டது.பொங்கல் பண்டிகை திருநாளில், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடப்பது வழக்கம். அதேபோன்று தீபாவளி நாளில், பெலகாவி நகரில், எருமை ஓட்டம் நடத்தப்படுகிறது.இந்த விளையாட்டு இன்று, நேற்றல்ல... பல நுாற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்டதாகும். தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், போட்டி நடத்தப்படுகிறது. நடப்பாண்டும் எருமை ஓட்டம் நடந்தது.பெலகாவி நகரின், சவ்ஹாடா கல்லியில், அலங்கரிக்கப்பட்ட எருமைகள் சாலையில் ஓடியது, அனைவரையும் கவர்ந்தது. இதை பிடிக்க முற்பட்ட இளைஞர்களின் சாகசம், மெய் சிலிர்க்க வைத்தது. விளையாட்டுக்காக எருமைகள், வாரக்கணக்கில் தயாராக்கப்படுவது வழக்கம். இன்றைய இளைஞர்கள் செய்வதை போன்று, எருமைகளுக்கும் ஸ்டைலிஷாக, ஹேர் கட்டிங் செய்கின்றனர். அவற்றின் உடலில் மழுமழுவென எண்ணெய் தடவப்படும். உடல் மீது விதவிதமான ஓவியங்கள் வரைந்து அலங்கரிப்பர். கொம்புகளுக்கு வர்ணம் தீட்டுவர். மயிலிறகுகள் சொருகுவர். இளைஞர்கள் பைக்குகளின் சைலன்சரை அகற்றிவிட்டு, பெரும் சத்தத்துடன் ஹாரனை அலறவிட்டபடி, பைக்கை வேகமாக ஓட்டுவர். இவர்களை விரட்டியபடி எருமைகள் ஓடின. சில இளைஞர்கள், எருமைகளின் முகத்தை கம்பளியால் தடவியதால், அவைகள் மேலும் கோபமடைந்து வேகமாக ஓடின. இவற்றை பிடிக்க இளைஞர்கள் முயற்சித்தனர். இந்த காட்சியை கண்டு பொது மக்கள் கை தட்டி ரசித்தனர். எருமை ஓட்டத்தை பார்க்க, சாலைகளின் இரண்டு ஓரங்களிலும் மக்கள் குவிந்திருந்தனர். விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். ஆனால் எருமை யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இம்முறை மட்டுமல்ல. இதற்கு முன்பும், யாரையும் தாக்கி காயப்படுத்திய உதாரணங்கள் இல்லை. சவ்ஹாடா கல்லி மட்டுமின்றி, டிகலவாடியின் கவுளிகல்லி, காந்திநகர், வடகாவி, கோனவாளகல்லி, சுக்ரவார பேட்டை, பசவன குச்சி உட்பட பல்வேறு இடங்களில் எருமைகள் ஓட்டம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:விவசாயிகள் பலரும், எருமைகளை நம்பி வாழ்கின்றனர். வீட்டுக்கு தேவையான பெரும் பகுதி பணம், எருமைகளால் கிடைக்கிறது. எருமைகளுக்கும், விவசாயிகளுக்கும் நெருங்கிய பந்தம் உள்ளது. எனவே ஆண்டு தோறும் ஒருநாள், எருமைகளை அலங்கரித்து, மகிழ்கிறோம். எருமைகள் ஓட்டம் ஏற்பாடு செய்கிறோம். இது பல நுாற்றாண்டுகளாக நடந்து வரும் சம்பிரதாயம். அதை நாங்கள் இன்றும் தொடர்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை