ஷிகாவி காங்., வேட்பாளரை கண்டுகொள்ளாத தலைவர்கள்
ஷிகாவி காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமதுகான் பதானுக்கு ஆதரவாக, அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் யாரும் இதுவரை பிரசாரம் செய்யவில்லை.ஹாவேரி ஷிகாவி தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக யாசிர் அகமதுகான் பதானும், பா.ஜ., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசவராஜ் பொம்மை மகன் பரத்தும் போட்டியிடுகின்றனர். யாசிர் அகமதுகான் பதானை வேட்பாளராக அறிவித்தது, முன்னாள் எம்.எல்.ஏ., அஜ்ஜம்பீர் காத்ரிக்கு பிடிக்கவில்லை. சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு செய்தார். முதல்வர் சித்தராமையா கேட்டு கொண்டதால், மனுவை வாபஸ் பெற்றார். யாசிர் அகமதுகான் பதான் வெற்றிக்கு உழைப்பதாக, அஜ்ஜம்பீர் காத்ரி கூறினார்.ஆனால், இதுவரை பிரசார களத்தில் அவரை காணவில்லை. அவர் மட்டும் இல்லை, அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் யாரும் பிரசாரத்திற்கு வரவில்லை. இதனால் யாசிர் அகமதுகான் பதான், தனது ஆதரவாளர்களுடன் சென்று பிரசாரம் செய்கிறார். கடந்த நான்கு தேர்தலிலும், ஷிகாவியில் காங்கிரஸ் தோற்று போனது.இம்முறையாவது அங்கு வெற்றி பெற வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர். ஆனால் பிரசாரத்திற்கு வராமல் எப்படி வெற்றி பெற முடியும் என்று, தலைவர்கள் மீது ஷிகாவி காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். - நமது நிருபர் -