பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு:மணிப்பூர் மலர் கண்காட்சியில் அதிர்ச்சி
இம்பால்: மணிப்பூரில் மலர் கண்காட்சியில், பத்திரிகையாளர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் நேற்று மாலை மலர் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, நாகலாந்து டிவி சேனலில் பத்திரிகையாளராக உள்ள அசாம் மாநிலத்தை சேர்ந்த திப் சாய்கியா, தகவல் சேகரிக்க சென்றிருந்தார்.அப்போது,அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திப் சைகியா மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் திப் சாய்கியாவுக்கு வலது காலின் அடிப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.காயமடைந்த அவரை, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக, நாகலாந்து மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆபத்து கட்டத்திலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மணிப்பூர் மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட ஏர் ரைபிள் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டது.குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய ஒரு குழு தயாராக உள்ளது. இருப்பினும், குற்றத்திற்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை. விரிவான விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.