அமைச்சர்கள் வீடு அருகே பீஹாரில் துப்பாக்கி சூடு
பாட்னா: பிரதமர் மோடி இன்று பீஹார் வரும் நிலையில், அமைச்சர்கள் குடியிருக்கும் பகுதியில் மர்மநபர்கள் நேற்று துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள போலோ ரோடு பகுதியில் அமைச்சர்கள், சட்டடசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் முக்கிய அதிகாரிகள் வீடுகள் அமைந்துள்ளன. மேலும் முதல்வர் நிதிஷ் குமார், கவர்னர் ஆரிப் முகமது கான் ஆகியோரது வீடுகளும் அருகே உள்ளன. இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை, மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் திடீரென துப்பாக்கியால் ராகுல் என்பவரை நோக்கி சுட்டுவிட்டு தப்பினர். இதில், அதிர்ஷ்டவசமாக அவர் காயம் இன்றி தப்பினார். இது பற்றி அறிந்த விமான நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கிடந்த சுடப்பட்ட தோட்டாவை கைப்பற்றி விசாரணை நடத்தினர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய குற்றவாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர். பிரதமர் மோடி இன்று பீஹாரின் சிவான் பகுதிக்கு வருகை தரும் நிலையில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.