2வது சுதந்திர போராட்டம் சித்தராமையா அழைப்பு
பெங்களூரு: 'அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற இரண்டாவது சுதந்திர போராட்டம் நடத்த தயாராக இருக்க வேண்டும்' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:கடந்த காலத்தை பற்றி சிந்திக்காமல், நிகழ்காலத்தின் யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. அரசியலமைப்பின் மூன்று முக்கிய துாண்களான நிர்வாகம், சட்டசபை, நீதித்துறை ஆகியவை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும்போது மட்டுமே, அரசியல் அமைப்பை நிலைநிறுத்த முடியும், ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும்.சர்வாதிகாரத்தின் கீழ், நம் நிர்வாக கிளை செயலழிந்து வருகிறது. சட்டசபை விலைக்கு வாங்கப்படுகிறது. நீதித்துறையை மிரட்டி, கட்டுப்படுத்த ஒரு சதி நடந்து வருகிறது என்பது கசப்பான உண்மை.நிர்வாக கிளை, சட்டசபை, நீதித்துறையின் துாண்கள் பலவீனமடைந்து, அதிகாரத்துக்காக மாறும்போது, அரசியலமைப்பை பொருட்படுத்தாமல், ஜனநாயக அமைப்பு குறைமதிப்புக்கு உட்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.நம் நாடு இன்று மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்றும் பெரும் பொறுப்பு, ஒவ்வொரு குடிமகனின் தோள்களிலும் உள்ளது.ஜாதி, மதம், பிரிவு, பிராந்திய வேறுபாடுகளை மறந்து, வெளி எதிரிகளை தோற்கடிக்க, முழு நாட்டையும் ஒன்றிணைக்க, சுதந்திர போராட்டம் நடத்தப்பட்டது. அதுபோன்று நாட்டிற்குள் உள்ள அரசியல் அமைப்பு விரோத எதிரிகளுக்கு எதிராகவும், போராட்டம் நடத்தப்பட வேண்டும்.இதற்காக இரண்டாவது சுதந்திர போராட்டம் நடத்தப்படவில்லை என்றால், அடுத்த தலைமுறைக்கு உயிர்வாழ ஜனநாயகம் இருக்காது. இது வாழ்வா, சாவா என்ற கேள்வி. இந்த குடியரசு தினத்தன்று நாளில் அனைவரும் ஒன்றிணைந்து, அரசியலமைப்பை காப்பாற்ற உறுதி ஏற்க வேண்டும்.இந்த சூழலில் சுதந்திர போராட்டத்தை வழிநடத்திய நம் கட்சி, 'ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்' என்ற பிரசாரத்தை துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.