வெறுப்பு அரசியலில் நம்பர் 1 தேவகவுடா மீது சித்து குற்றச்சாட்டு
ராம்நகர் ; ''ம.ஜ.த.,வில் இருக்கும் ஒக்கலிக சமூக தலைவர்களை, தேவகவுடா வளர விட மாட்டார்,'' என, முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டி உள்ளார்.ராம்நகரின் சென்னப்பட்டணாவில் சித்தராமையா அளித்த பேட்டி: வெறுப்பு அரசியல் செய்வதில் தேவகவுடா தான் 'நம்பர் ஒன்'. தங்கள் குடும்பத்தினரின் அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருப்பர் என்பதற்காக, ம.ஜ.த.,வில் இருக்கும் ஒக்கலிக சமூக தலைவர்களை தேவகவுடா வளர விட மாட்டார்.ம.ஜ.த.,வில் இருந்த பி.எல்.சங்கர், ஒய்.கே.ராமையா, பச்சேகவுடா, வரதேகவுடா, பைரேகவுடா உட்பட பல ஒக்கலிக தலைவர்களின் அரசியல் வாழ்க்கை, தேவகவுடாவால் திட்டமிட்டு முடிக்கப்பட்டது. இதை உணர்ந்து தான் செலுவராயசாமி, பாலகிருஷ்ணா, புட்டண்ணா உள்ளிட்டோர் காங்கிரசில் சேர்ந்தனர்.தேவகவுடா முதல்வர் ஆகுவதற்கு உதவி செய்தது நான் தான். நான் உட்பட சிலர் அவருக்கு ஆதரவாக இல்லாவிட்டால், ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வராகி இருப்பார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் இரண்டாவது முறையாக, முதல்வராகி இருப்பதை தேவகவுடாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கு நெஞ்சு எரிச்சல் அதிகமாகிவிட்டது. என்னை வெறுக்கிறார்.பேரனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, சென்னப்பட்டணாவில் தேவகவுடா ௬ நாட்கள் பிரசாரம் செய்தார். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக யோகேஸ்வர் போட்டியிட்டு இருந்தால், பிரசாரம் செய்ய அவர் வந்திருக்க மாட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.