உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுக்கடலுக்கு தள்ளப்பட்ட சிங்கப்பூர் கப்பல்: தீயை அணைக்கும் பணி தீவிரம்

நடுக்கடலுக்கு தள்ளப்பட்ட சிங்கப்பூர் கப்பல்: தீயை அணைக்கும் பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: கேரள கடற்பகுதியில் தீ விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல், நிலப்பரப்பில் இருந்து, 40 நாட்டிக்கல் மைல் தொலைவு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. கப்பலில் பற்றிய தீயை அணைக்கும் பணியில், கடலோர காவல்படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

18 பேர் மீட்பு

நம் அண்டை நாடான இலங்கையின் கொழும்புவில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பைக்கு, 'வாங் ஹை 506' என்ற சரக்கு கப்பல் சமீபத்தில் பயணித்தது. சிங்கப்பூருக்கு சொந்தமான இந்த கப்பலில் 150க்கும் மேற்பட்ட 'கன்டெய்னர்'களில் பலவிதமான ரசாயன பொருட்கள் இருந்தன. கடந்த, 9ம் தேதி கேரள கடற்பகுதியான கண்ணுார் அழிக்கால் துறைமுகத்தில் இருந்து, 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் பயணித்தபோது, இந்த கப்பலில் தீப்பிடித்தது. கப்பல் முழுதும் பரவிய தீயால், அதிலிருந்த கன்டெய்னர்கள் வெடித்து சிதறின. இதனால், கப்பலின் கேப்டன் உள்ளிட்ட 22 பேரும் கடலில் குதித்தனர். இதில், 18 பேர் மீட்கப்பட்டு கர்நாடகாவின் மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிமிர்த்தும் பணி

கடலில் மூழ்கி மாயமான நான்கு பேரை தேடும் பணி தொடர்கிறது. கப்பலில் தீ பற்றியதால், அது கடலில் சாய துவங்கியது. இதையடுத்து, கடலோர காவல் படைக்கு சொந்தமான வாட்டர் லில்லி எனப்படும் அவசரகால சேவை கப்பல் வாயிலாக, அதை நிமிர்த்தும் பணி சமீபத்தில் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் கப்பல் கடல் நடுவே இழுத்துச் செல்லப்பட்டது. கரையில் இருந்து, 27 நாட்டிக்கல் மைல் தொலைவில் நின்றிருந்த கப்பல், தற்போது 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது. மணிக்கு, 2 கி.மீ., வேகத்தில் கப்பல் நகர்த்தப்படுகிறது. இந்தப் பணியில் கடலோர காவல்படையின் 'சீ கிங்' ஹெலிகாப்டர் மற்றும் சாக் ஷன், சமர்த், விக்ரம், ஷிப் ஷார்தா போன்ற கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்று காரணமாக, கரையை நோக்கி கப்பல் நகரும் பணியும் இந்த கப்பல்கள் வாயிலாக கட்டுப் படுத்தப்பட்டுள்ளன. கப்பல் தொடர்ந்து எரிந்து வருவதாலும், வானிலை காரணமாகவும், அதை நகர்த்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர கடலோர காவல்படையினர் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜூன் 15, 2025 08:33

எதுக்கு வீண்செலவு? தானே எரிஞ்சு அணைஞ்சிடும் விடுங்க.


Kasimani Baskaran
ஜூன் 15, 2025 07:04

தீயை பரவுவதற்கு முன் அணைக்கவில்லை என்றால் முழுவதும் ஏரிந்துதான் சாம்பலாகும்.


Padmasridharan
ஜூன் 15, 2025 04:03

தண்ணீர் Tsunãmiக்கு பிறகு தற்பொழுது எல்லாம் நெருப்புத்தீ மையமாக உள்ளது..ஏன் சாமி. .