வீடு புகுந்து பெண் கூட்டு பலாத்காரம் பெங்களூரு அருகே ஆறு பேர் கைது
பெங்களூரு: பெங்களூரு அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தில், ஆறு வாலிபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவைச் சேர்ந்தவர், 30 வயது பெண். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர், பிள்ளைகள், சகோதரியுடன், பெங்களூரு ரூரல் கங்கொண்டனஹள்ளியில் வாடகை வீட்டில் வசிக்கிறார். அழகு நிலையத்தில் வேலை செய்கிறார். கடந்த 21ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, இப்பெண்ணின் வீட்டிற்குள் ஆறு வாலிபர்கள் புகுந்தனர். தங்களை, 'போலீஸ் இன்பார்மர்' என்று கூறிய அவர்கள், உங்கள் வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், விபசாரம் நடப்பதாகவும் எங்களுக்கு தகவல் வந்துஉள்ளது என்று கூறினர். இதற்கு, அப்பெண் மறுப்பு தெரிவித்தார். அப்போது, ஆறு வாலிபர்களும் சேர்ந்து, பெண்ணின் சகோதரி, கணவர், வீட்டிற்குள் இருந்த ஆண் ஒருவரையும் தாக்கி, அறைக்குள் தள்ளி கதவை அடைத்தனர். பின், 30 வயது பெண்ணை தரதரவென, வீட்டின் அருகே உள்ள கொட்டகைக்கு இழுத்து சென்றனர். அங்கு, அப்பெண்ணை மூன்று பேர் மாறி, மாறி பலாத்காரம் செய்தனர். பின், பெண்ணை வீட்டிற்குள் இழுத்து வந்தனர். வீட்டில் இருந்த, 25,000 ரூபாய், இரண்டு மொபைல் போன்களை பறித்து கொண்டு தப்பினர். பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண்ணின் கணவர் அளித்த புகாரில், மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பெண்ணின் வீட்டில் இருந்து சிறிது துாரத்தில் உள்ள வீட்டில் வசித்த நவீன், கார்த்திக், சுயோக், சீனா, ஷாங்கிலி, பிரித்வி ஆகிய ஆறு பேரை நேற்று கைது செய்தனர்.