ஆறு நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
கட்சிரோலி, மஹாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் நக்சல் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை, 'என்கவுன்டரில்' பாதுகாப்புப் படையினர் நேற்று சுட்டுக்கொன்றனர். தெலுங்கானா எல்லையையொட்டி அமைந்துள்ள மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில், பிரஹணஹிதா ஆற்றின் குறுக்கே நக்சல் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன்படி அப்பகுதியில் போலீசாருடன், மத்திய ரிசர்வ் போலீஸ் படை உட்பட பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் கோலமார்கா மலைப்பகுதி அருகே பதுங்கி இருந்த நக்சல் அமைப்பினர், திடீரென பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், நக்சல் அமைப்பின் நான்கு பேர் பலியாகினர்.கொல்லப்பட்ட நான்கு பேர் பற்றி தகவல் தரும் நபருக்கு, 36 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக பாதுகாப்புப் படையினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதேபோல், சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் இரு நக்சல்கள், சுட்டுக் கொல்லப்பட்டனர்.