‘ஸ்நாக்ஸ்’ பாக்கெட்டுகளில் இனியும் எடை குறையாது
புதுடில்லி: மூலப்பொருட்களின் விலை உயர்வால், 10 ரூபாய் ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளில் தின்பண்டங்களின் அளவை தொடர்ந்து குறைத்து வந்த நிறுவனங்களுக்கு, மத்திய அரசின் சமையல் எண்ணெய் வரிக்குறைப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதனால், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையின்போது, நிறுவனங்கள் எடை குறைப்பிலோ அல்லது விலையேற்றத்திலோ ஈடுபடக்கூடிய நிலை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 24 முதல், பல்வேறு வகையான எண்ணெய் ரகங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு கணிசமாக குறைத்தது. இதன் விளைவாக கச்சா பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய்க்கான வரி 11 சதவீதமாகவும், சூரியகாந்தி எண்ணெய்க்கான வரி 5.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்களின் இறக்குமதி செலவு 4 முதல் 9 சதவீதம் வரை குறையும் என ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனம் கணித்துள்ளது. சமையல் எண்ணெய் செலவில் 3 முதல் 4 சதவீதம் குறைந்தால் கூட, தின்பண்டங்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 330 கோடி ரூபாய் வரை மிகப்பெரிய அளவிலான கூடுதல் லாபம் கிடைக்கும் என துறை ரீதியான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ‘பிகாஜி, ஹல்திராம்ஸ், பிரதாப் ஸ்நாக்ஸ், பிரிட்டானியா, ஐ.டி.சி.,’ போன்ற முன்னணி உணவு நிறுவனங்களுக்கு இது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ஏற்கனவே இருமுறை விலையை உயர்த்திய பிகாஜி நிறுவனம், இந்த வரிக்குறைப்பால் கிடைக்கும் சேமிப்பை நிறுவனத்தின் லாப வரம்பை சீரமைக்க பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. தின்பண்டங்களின் எடையை அதிகரிப்பது குறித்து எந்த நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், 5 மற்றும் 10 ரூபாய் எடையை இனியும் குறைக்க வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு இல்லை. சமையல் எண்ணெய் மீதான வரிக்குறைப்பால், நிறுவனங்களின் உற்பத்தி செலவு குறைந்துள்ளது. இதனால் 10 ரூபாய் பாக்கெட்டுகளில் உள்ள தின்பண்டங்களின் எடை இனியும் குறையாது என எதிர்பார்க்கலாம் 80% அமைப்பு சார்ந்த முன்னணி தின்பண்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனையில், 5 மற்றும் 10 ரூபாய் சிறிய பாக்கெட்டுகளின் பங்கு11% மத்திய அரசின் புதிய அறிவிப்பால் பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய்க்கான ஒட்டுமொத்த இறக்குமதி வரி 11 சதவீதமாக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.