சமூக ஆர்வலர் மேதா பட்கரின் தண்டனை உறுதி
புதுடில்லி: டில்லி துணைநிலை கவர்னராக வி.கே.சக்சேனா, 67, பதவி வகிக்கிறார். இவர், 2000ம் ஆண்டு குஜராத்தின் ஆமதாபாதில் செயல்படும் அரசு சாரா அமைப்பான, தேசிய சிவில் உரிமைகள் குழுவின் தலைவராக இருந்தார். அப்போது, ஹவாலா பரிவர்த்தனைகளில் வி.கே.சக்சேனா ஈடுபட்டதாக, நர்மதா பச்சாவ் அந்தோலன் இயக்கத் தலைவரும், சமூக ஆர்வலருமான மேதா பட்கர், 70, குற்றஞ்சாட்டினார். அதிருப்தி அடைந்த வி.கே.சக்சேனா, 2001ல், மேதா பட்கர் மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, 2003ல், ஆமதாபாதில் இருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது. டில்லி நீதிமன்றத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேல் விசாரணை நடந்த நிலையில், சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு ஐந்து மாத சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சில நாட்களிலேயே, நன்னடத்தை காரணமாக அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். தண்டனையை ரத்து செய்யக் கோரி மேதா பட்கர் தொடர்ந்த வழக்கை கடந்த மாதம் 29ல் விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது. அதே சமயம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விசாரணை நீதிமன்றத்தில் நேரிலோ அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலமோ ஆஜராக வேண்டும் என, நிபந்தனையை திருத்தியது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேதா பட்கர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், என்.கோட்டீஸ்வர் சிங், தண்டனையை உறுதி செய்தனர். அதே சமயம், மேதா பட்கருக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்தனர்.